ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை! ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை! ஓம் ஸ்ரீகுருவே சரணம்!
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் காவிரி குளியல் நிறைவேற்றியவுடன் தினமும் நித்திய சூரிகள் என்று அழைக்கப்படும் பெருமாள் பக்தர்கள் அம்மாமண்டபம் சாலை வழியாக நடந்தே சென்று ஸ்ரீரெங்கப் பெருமாளைத் தரிசனம் செய்கிறார்கள் என்பது பெரியவர் சிறுவனுக்கு அளித்த திருவாய் மொழி. இது இன்றும் நடக்கும் ஆனந்த வைபவம். அத்தருணத்தில் அவ்வழியே செல்லும் மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் அவர்கள் காற்றுப்பட்டால் கூட எல்லையில்லா அனுகிரக சக்திகள் கிடைக்கும் என்பது உண்மை. எனவே, முடிந்த மட்டும் திருச்சி வாழ் மக்கள் இந்த தெய்வீக சந்தர்பத்தை பயன்படுத்தி நித்திய சூரிகளின் ஆசீர்வாதத்தைப் பெற்று உய்வடைய வேண்டுகிறோம்.
கும்பகோணம் அருகே திருபுவனம் ஸ்ரீகம்பஹரேஸ்வரர் திருத்தலம் சரபேஸ்வஸ்வர மூர்த்தி அருளும் அற்புதமான திருத்தலமாகும். யுகங்கள் கடந்து நிற்கும் தொன்மையான சிவத்தலம். இங்குள்ள தூண்கள் கோபுரம் தாங்கி தூண்கள் என்று அழைக்கப்படுகின்றன. சாதாரணமாக ஒரு கோயில் கோபுரத்தில் லட்சக் கணக்கான தெய்வ மூர்த்திகளும், தேவதைகளும், ரிஷிகளும், திக்கு சக்திகளும், பஞ்ச பூத சக்திகளும் நிறைந்திருக்கும். திருபுவனத் திருத்தலத்தில் உள்ள தூண்களில் பற்பல கோபுரங்களே வியாபித்திருப்பதை நீங்கள் உங்கள் தூலக் கண்களால் காணலாம் என்றால் இத்தூண்களின் அளப்பரிய தெய்வீக சக்தியை எப்படி வார்த்தைகளால் வர்ணிக்க இயலும்? இங்கு ஒவ்வொரு தூணிலும் பல கோபுரங்கள் எழுந்தருளி இருப்பதால் திருபுவன திருத்தலத்தை ஒரு முறை தரிசித்தாலே பல்லாயிரக் கணக்கான திருக்கோயில்களை தரிசித்த பலனை நீங்கள் பெற முடியும்.
சமாதானத் தூண்கள் அல்லது அமைதி தூண்கள் என்று அழைக்கப்படும் தூண்கள் மனிதனின் மனதில் எழும் கேள்விகளுக்கு விடை கொடுத்து அவனை அமைதிப்படுத்துகின்றன. கேள்விகளுக்கு உரிய விடையைப் பெற்ற மனம் அமைதி கொள்வது ஒரு விதம். ஆனால், மனதில் கேள்விகளே எழா விட்டால் அப்போது ஏற்படுவதுதானே உண்மையான அமைதி. இத்தகைய அனுகிரகத்தை தரும் தூண்கள் நிலை கொண்ட இடமே திருச்சி திருவாசி சிவாலயம் ஆகும். இங்குள்ள திருநீற்றுத் தூண்கள் எனப்படும் அமைதித் தூண்களை வழிபடுவதால் அடிக்கடி மனதில் எழும் கேள்விகளுக்கு இத்தல இறைவன் உரிய விடையை கொடுப்பதுடன், பக்தர்களின் தீவிர வழிபாட்டைப் பொறுத்து உரிய காலத்தில் மனதில் கேள்விகளே எழாத உயர்ந்த நிலையையும் அருள்வார்.
திருச்சி நாச்சியார் கோவிலில் கைஉடைந்த ஆஞ்சநேய மூர்த்தி அருளும் மண்டபத்தில் உள்ள பிரம்மாண்ட தூண்களே த்விபுஜங்க தூண்கள் என்றழைக்கப்படுகின்றன. மிகவும் அற்புதமான, அபூர்வமான தூண்கள் இவை. உலகில் வேறெந்த திருக்கோயிலிலும் இது போன்ற தூண்கள் கிடையாது. Astral travel என்று அழைக்கப்படும் நுண்இழைப் பயணம் மேற்கொள்வோர் மற்ற கிரகங்களுக்கு, நட்சத்திர மண்டலங்களுக்கு, தேவ லோகம், கந்தர்வ லோகம் போன்ற லோகங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு லோகத்திற்கும் செல்ல வேண்டிய பயண நிலையங்கள் உண்டு.
நாக லோகம் செல்ல வேண்டும் என்றால் திருச்சி நாகநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள தூண்கள் அல்லது கோபுரக் கலசங்கள் வழியாக அல்லது அத்திருக்கோயில் தீர்த்தம் (தெப்பக்குளம்) வழியாகச் செல்ல வேண்டும். ஆதிசேஷனின் லோகம் செல்ல வேண்டும் என்றால் அலமேலு மங்காபுரத்தில் உள்ள திருக்கோயில் தூண்கள் வழியாகவோ, கோபுரக் கலசங்கள் வழியாகவோ, அல்லது கும்பகோணம் அருகே உள்ள சேஷம்பாடி திருத்தல கோபுரக் கலசங்கள் வழியாகவோதான் செல்ல வேண்டும். இவ்வாறு பற்பல நிபந்தனைகள் உண்டு.
பூரி திருத்தலத்தில் உள்ள ஜகந்நாத பெருமாள் விக்ரஹம் ஜகந்நாத லோகத்தில் மட்டுமே காணப்படும் ஜகந்நாத துல்யம் என்னும் மூலிகை மரத்தால் செய்யப்பட்டதாகும். இந்த தெய்வீக மரங்கள் பூலோகத்தில் காணப்படுவதில்லை. ஆனால், இத்தகைய அற்புத மரத்தால் அமைந்த திருத்தூண்களே திருச்சி அருகே திருத்தலையூர் பெருமாள் ஆலயத்தை அலங்கரிக்கும் தூண்கள். மிகவும் தொன்மை வாய்ந்த இந்த அற்புத பெருமாள் ஆலயமும், அங்குள்ள ஜகந்நாத தூண்களும் பராமரிப்பின்றி இருப்பது வருத்தத்திற்குரியதே.
We use cookies to analyze website traffic and optimize your website experience.