ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை! ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை! ஓம் ஸ்ரீகுருவே சரணம்!
முதலில் ஆத்மா என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். தற்காலத்தில் கம்ப்யூட்டரின் உயிர் நாடியான பிராஸஸரில் ஒன்றான பெண்டியம் – 3 (processor chip) ல் பல லட்சக்கணக்கில் மைக்ரான்ஸ் இருப்பதாகச் சொல்கின்றார்கள்.. அதாவது ஒரு தலைமுடியின் நூற்றின் ஒரு பங்காக இருப்பதே பெண்டியம் சிப்பில் உள்ள ஒரு மைக்ரான் எலெக்ட்ரானிக்ஸ் அணுப்பகுதியாகும்... ஆனால் இதையும் விட ஆயிரம் மில்லியன் மடங்கு மெல்லியதாக ஒரு பொருளை உங்களால் உணர முடியுமா அல்லது கற்பனை செய்து பார்க்கத்தான் முடியுமா ? இதைப் போன்றதே நம்முள் நாமாகவே, உள்ள ஆத்மா!
விஞ்ஞானமய இப்பூவுலகில் the lightest object ஒன்றைக் காண்பியுங்கள் அதைவிட மெல்லியதின் மெல்லியதாக அணுவிலும் அணுப் பொருளாக விளங்குவதே ஆத்மா ஆகும். இதுவே பரம்பொருளிடமிருந்து வந்த ஜோதியின் தொகுப்பு.. இது உலகத்தின் அனைத்துப் பொருட்களிலும் திட, திரவ, வாயு மற்றும் நாம் அறியாத சூட்சுமமான இடங்களிலும் நிலைத்திருப்பதாகும்.. ஆனால் எத்தகைய அண்டசராசரங்களையும் கண் இமைக்கும் நேரத்திலும் குறுகிய நேரத்தில் கடந்து செல்லக் கூடியது. நீர், சுவர், மரம், பாறை, மலை என அனைத்தையும் ஊடுருவிச் செல்லக்கூடியது. இறைப் பரம்பொருளிடமிருந்து வந்தமையால் புனிதத்தின் சிகரமாக விளங்குவது.. இதைவிடப் புனிதமான, ஒளிமயமான பொருள் எதுவுமே கிடையாது. எப்போதும் ஜீவசக்தி நிறைந்தது.. அதனால்தான் இது அழிவதில்லை, மறைவதில்லை, மீண்டும் தோன்றுவதில்லை., ஐக்கியப் பொருளாக எந்த இறைப் பரம்பொருளிடமிருந்து வந்ததோ அங்கே சென்றே ஐக்கியமாகும்.. இந்த ஐக்கிய நிலைதான் முக்தியும், மோட்சமும், கைவல்யமும் ஆகும்.. பஞ்ச பூத சக்திகளால் அழிக்க முடியாது.. காரணம் பஞ்ச பூதங்களை உருவாக்கும் சக்தியைப் பெற்றதாகும்.. காற்றாலோ, நெருப்பாலோ அண்ட முடியாது, the purest of the purest ஆக ஜோதி மயமாக விளங்குவது.. இந்த ஆத்ம ஜோதி மிகவும் சாந்தமானது. ஆனால் எத்தகைய ருத்ராக்னியையும் தோற்றுவிக்கக் கூடியது. இந்த ஆத்ம ஜோதியே நம் உள்ளத்தில் இறைத் தூதுவனாக விளங்குவதாகும்..இதை உள்ளத்தில் இவ்வாறு கண்டவர்களே மகான்களும், சித்தர்களும் ஆவர்.. உணராதோர்தான் மீண்டும் மீண்டும் பிறவிகளை எடுக்கின்றனர்... எனவேதான் இறைவன் இதனைப் பவித்திரமாக, பரிசுத்தமாக, பத்திரமாக, ஜீவன்களின் உள்ளத்தில் பதித்திருகிறான்.
மரியாதை நிமித்தமாக ஒருவரையொருவர் வணங்குவது கூட நம்முள் உறைந்திருக்கின்ற ஆத்ம ஜோதியின் வழிபாடே ! இருகரங்களையும் ஒருமித்துக் குவித்துக் கும்பிடுகையில் உள்ளே மறைந்து ஒளிர்கின்ற அந்தர் ஆத்ம ஜோதி முத்திரையாக அது மலர்கின்றது. எவ்வாறு இரண்டு கரங்களுக்குள் ஆத்ம ஜோதி மறைந்து நமது வணக்கமாக, வணங்கப்படுதலாக உள்ளதோ அதுபோல உடலுக்கும் உயிருக்கும் உள்ளே மறைந்து விளங்குகின்ற ஜோதிதான் ஆத்ம ஜோதியாகும். இப்படிப் பார்த்தால் இப்பூவுலகில் உயிருக்கும் உடலுக்கும் இடையில் ஜோதியாக மறைந்திருக்கின்ற ஆத்ம ஜோதியை உணர்ந்து வாழ்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எவ்வாறு ஆத்ம ஜோதி அழிவில்லாததாக என்றும் நிரந்தரமாக விளங்குகின்றதோ அதே போலத்தான் இதனை உணர்ந்தவர்களும் ஸ்ரீஅகஸ்தியராக, ஸ்ரீவசிஷ்டராக, ஸ்ரீபுலத்தியராகக் கோடானு கோடி யுகங்கள் நிலைத்து நின்று நமக்கு அருள்வழி காட்டுகின்றார்கள். எனவே முதலில் சித்தோபநிஷத் காட்டுகின்ற இந்த ஆத்ம் ஜோதி விளக்கத்தை மீண்டும் மீண்டும் படித்து இறைத் துதி போல் ஓதி வந்தால் ஆத்ம விளக்கத்தைப் பெற்றுத் தருவதற்கான தக்க சற்குருவின் மகிமையை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். குருவின்றி வெறும் புத்தகப் படிப்பால் மட்டும் ஆத்மாவை உணரமுடியாது.
நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் தினந்தோறும் கண் இமைக்கின்ற சிந்தனை வந்துதான் செல்கின்றது. ஆனால் நாம் இதனைப் புரிந்து கொள்ளவில்லை அவ்வாறு வந்து செல்கின்ற ஒரு சில விநாடி நேரத்திலாவது நம் கண் இமைப்பதற்கான காரணத்தை ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். அது எப்படி எந்த ஒரு Motor Mechanism இல்லாமல் கண்மட்டும் இமைத்துக் கொண்டு இருக்கிறது? ஆக்கப்படுத்தப்பட்டதாக எப்படி இமை தானாக, இயக்கமின்றி இமைக்கின்றது! உள்ளே உயிர் இருக்கும் வரைக்கும் இந்த கண் சிமிட்டுதல் நடைபெறுகின்றதல்லவா? எனவே உள்ளே உள்ள ஆத்மாவிற்கும் உங்களுடைய கண் இமைப்பிற்கும் நிறையத் தொடர்பு உண்டு. நீங்கள் பார்க்கின்ற காட்சிகள் எல்லாம் நல்ல காட்சிகளாக இருந்தால் கண் இமைப்பதும் காலத்தின் பால் செல்வதும் உள்ளூர நல் உணர்வாகத் தோன்றும், ஆனால் கண் இமைப்பதை உணராமல் அதுதானாக நடைபெறுகிறது என்று நீங்கள் நினைப்பதற்குக் காரணமே உங்கள் ஆத்மாவை நீங்கள் உணரவில்லை என்றே பொருள்.
“ஆத்மம்” என்பதற்கு எத்தனையோ அர்த்தங்கள், விளக்கங்கள், வேதங்கள் முதல் நாலடி வெண்பா வரை அளிக்கப்பட்டுள்ளன. இவை படிக்கும் போது, நன்கு புரிவது போல மிகவும் சுவாரசியமாக இருக்கும். பிறகு மறந்து விடும்., இதற்குக் காரணம் என்ன?
மனிதனின் உள்ளிருக்கும் இருதயத்தை, குடலை வெளியில் நன்கு காண முடியுமா? மலமூத்ராதி உணர்வுகளும் அவரவர்களுக்குள் ஆவதே! ஆனால் அவரவர்தாமே இவற்றை நன்கு “உணர” முடியும் அன்றோ! அதாவது அவரவர் கர்ம வினைகளை அவரவர்களே அனுபவித்தாக வேண்டும் என்பதை உணர்த்துவதே மலமூத்ராதி அவஸ்தைகளாகும்.
என்னதான் மனித அவயங்களை “Medical Scan” செய்து பார்த்தாலும், உள்ளிருக்கும் அதே வண்ணத்தில், வடிவில் காண முடியுமா? இதே போல, அவரவர் உள்ளுள் ஒளிரும் ஆத்ம சக்தியை வெளி விளக்கங்களால் காண்பது முழுமை ஆகாது!
ஜீவனுக்குள் ஜீவன் ஜீவசக்தியைத் தரிசிக்கும் ஜீவ ஆடித்வம்!
மிக மிக உத்தமமான ஆத்ம வடிவ விளக்த்தில், ஒரு ஜீவன் மற்றொரு ஜீவனுக்கு “ஆடியாக” உரைக்கின்றனர். அதாவது ஜீவனுக்கு ஜீவன் “கண்ணாடியாக” அமைவதாகிறது. இந்த மிக எளிமையான சித்தர்களின் ஆத்ம சக்தி வாக்கியத்தையே, “ஜீவனுக்கு ஜீவன் ஜீவ ஆடியே!” என்ற ஆத்மவிசார வேத உற்பத்தி வாக்கியமாகவும் சித்தர்கள் அளிக்கின்றனர்.
அதாவது, “ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குக் “கண்ணாடியாக” ஆகின்றான். எனவே “கண்ணாடி” போலத் தன்னைத் தானே உணர உதவுவதே ஜீவ சமுதாய வாழ்க்கை ஆகும். அன்னதானத்திலும் தன்னை உணர வல்ல ஆத்ம சக்திகள் கிட்டுவதால் தான் அன்னதானமே அற்புதமான “யோகமாகப்” போற்றப் பெறுகின்றது.
இதனைத்தான் “ஆத்மார்த்தமான பூஜை, ஆத்மார்த்தமான அன்னதானம், ஆத்மார்த்தமான இசை, ஆத்மார்த்தமான தர்ப்பணம்” என்றெல்லாம் உரைக்கின்றனர். இத்தகைய உத்தம நிலையானது “சொல்லியோ, படித்தோ வருவதன்று, அனுபவப் பூர்வமாக உணர்வதே”, என்பதைக் கூட இவ்வாறு படித்துத்தான் கலியில் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.
யுகாதி யுகமாக, ஒரு பெயருக்கு ஒரு வடிவம் என்பதில்தான் மனித சமுதாயம் ஈடுபாடு கொண்டு விட்டது. உதாரணமாக “மகாத்மா காந்தி” என்றால் “இப்படித்தான் இருப்பார்” என்று மனித சமுதாயத்திற்கு உருவ முறையே மிகவும் பழகி விட்டது. இந்த “உருவச் சார புத்தி” பெரிதும் மாறுதல் அடைந்தால்தான், அனைத்து ஜீவன்களுக்குள் உறையும் ஆத்ம சக்திப் பரிணாமம் நன்கு புரிபடும். “உருவத்தில்” மனம் ஒன்றிடில் “உருவம்” மறைந்தால் மனநிலை மாறுபாடடையும் என்பதால்தான் சத்குருமார்கள், தங்களைப் “புகைப்படம்” எடுக்க விரும்புவதில்லை!
“உருவத்தைப் பிடிக்காதே! உள்ளத்தில் பிடி” என்றவாறான, தெய்வீகத்தில், குருவருளில் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ள வேண்டிய ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்தரின் அருள்மொழியை, உள்ளத்தில் நன்கு சாசுவதமான ஒளிச் சுடராக ஏற்றிடுக! அதாவது வெறுமனே “கடவுளை நம்புதல்” மட்டும் போதாது, ஒவ்வொரு கண் இமை அசைவும், உலகின் ஒவ்வொரு சலனமும், இறையருளால்” நிகழ்வதாகையால், “இறை நம்பிக்கையை” வாழ்வின் ஒவ்வொரு விநாடியிலும் விருத்தி செய்து வரவேண்டும். இதுவே உலகில் ஒவ்வொரு ஜீவ வாழ்வின் சாசுவதமான லட்சியமாகும்.
பிம்பங்களே பிறவி நிலைகள்
உலக மனித உருவங்கள் பண்டைய பிறவித் தொகுப்புகளின் பிம்பங்களே! கிணற்றில், ஆற்று நீரில், பாத்திர நீரில் பிம்பமாகத் தெரியும் உருவமானது, சற்றே நீரை அசைத்தால், பிம்பமும் மாறி அசைந்து, மறைந்தும் மாறுகின்றது அல்லவா! இதைப் போலவே பிறப்பும், இறப்பும் சலனங்களாகும். இதனால்தான் “வாழ்க்கை நிலைகளை”, “பிறவிகளை” “நீர்க் குமிழிகள்” என உரைக்கின்றனர்.
இனியேனும் எந்தக் கேள்வியையும் உங்களுக்குள்ளேயே முதலில் கேட்டுக் கொள்ளுங்கள்., “நமக்குத்தானே பதில் தெரியாதே! அதனால்தானே கேட்கிறோம்” என்பது, உங்கள் வெளி அறிவால் ஏற்படும் உணர்வு ஆகும்.
உங்கள் உடல் வடிவமானது “பல்லாயிரக்கணக்கான பிறவிகளில் ஆற்றிய காரியங்களின் ஒட்டு மொத்த திரண்ட வடிவம்!” என்பதை முதலில் நன்கு தெரிந்து கொள்ளுங்கள். இதில் பல்லாயிரப் பிறவிகள், பல்லாயிரம் ஆண்டுகளின் எண்ணற்ற வகையிலான ஆன்ம அனுபவங்கள், அனுபூதிகள் ஆன்மீக ரீதியாக நன்கு திரண்டு வரும். இதுவே பூர்வ ஜன்மப் புண்ய விளைவுகள் என்று உணர்த்தப்படுகிறது. எவ்வளவு கெட்டவராக வாழ்ந்தாலும் அவருள்ளும் சிறிது ஆன்மீக அனுபவ அனுபூதிகள் சற்றுத் தொக்கியே நிற்கும்.
“எனவே, உங்களுக்குள்ளேயே முதலில் கேள்விகளைக் கேட்டுக் கொண்டால், உங்களுக்கே தெரியா வண்ணம், நீங்களே அறியா வகையில், பல எளிய, உத்தம, சிறப்பான விளக்கங்கள் உள்ளுறைப் பூர்வமா நிறையவே கிடைக்கும். அவற்றை இங்கு கொணர்ந்து வந்து மென்மேலும் தெளிவு பெறுதலே நன்று”.
தொடர்வது அனுபூதிகள், தொடராதது ஏட்டுப் படிப்பு!
“ஏனெனில், உங்களுடைய பித்ருக்கள் உங்களுள் புகுந்து உள்ஒலி மார்கமாக விடையளிக்கப் பன்னெடுங் காலமாகக் காத்துக் கிடக்கின்றனர். இதுவே “ஆத்ம விசாரம்” எனும் அற்புதமான மனயோகத்தின் ஆரம்பப் படிகள் ஆகும். மேலும் ஆன்மீகத்தில், “சரியா, இல்லையா, இதுவா, அதுவா?” என்று ஒரு வரி விடையில் எதையும் எதிர்பார்த்திடல் ஆகாது. ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு கண் அசைவுக்கும் ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டெனில், இதை இறைவனளித்த பரிசான பகுத்தறிவு கொண்டு வாழ்வில் பகுத்துணராதது யார் குற்றம்?
ஒரு சிறு தவிட்டு வண்டு முதல் பெரிய யானை, டினாசரஸ், முதலை உட்பட அனைத்துத் தாவரங்க்ளிலும், விலங்கினங்களிலும், உயிரற்றதாகக் கருதப்படுகின்ற திடப் பொருள்களிலும் நிறைந்திருப்பதாகும். ஒரு மனிதன் தன் உள்ளத்தில் நிலைத்திருக்கின்ற ஆத்ம ஜோதியையும், தவிட்டு வண்டின் சிறு உள்ளத்தில் உள்ள ஆத்ம ஜோதியையும் ஒன்றென உணர்ந்தால் இருவரும், இரண்டும் ஒன்றுக்கொன்று நன்றாக உரையாடிடலாம். அங்குமொழி பேதமில்லை. பேச்சு அவசியமில்லை..மனோலயமும் தேவையில்லை.. ஆத்ம உணர்வு பரிமாற்றம் கொள்ளும் போது உருவம், நிறம், மொழி பேதமே கிடையாது. இவ்வாறாக நம் இருதயத்திற்குள் பரிணமிப்பதுதான் சர்வேஸ்வரனிடமிருந்து பிறந்து நம்முள் குடிகொண்டுள்ள ஆத்ம் ஜோதி. இதுவே ஆன்மா, இதுவே ஆத்மம், இதுவே தெய்வீகம்..
இந்த ஆத்ம ஜோதி பரிசுத்ததையே காணும், புனிதத்தையே செய்யும், சுத்தத்தை மட்டுமே ஏற்றுக் கொள்ளும். இது பார்ப்பதும் கேட்பதும், செய்வதும், ஏற்பதும், அனைத்தும் புனிதமானதே, அசுத்தமும், அழுக்கும், அசத்தியமும் இதனைத் தீண்ட முடியாது. அண்டவும் முடியாது.. எல்லாருள்ளும் உறைகின்ற இந்த ஆத்ம ஜோதி நிலையானது.. அழியாது, எவராலும் அழிக்க முடியாது.. உள்ளும் புறமும் விரிந்து வெளி வந்து நிறைந்திருக்கக் கூடியது. இரண்டு ஆத்ம ஜோதிகள் ஒன்றையொன்று புனிதமாகக் காணும்போத் அதுவே உண்மையான அன்பாக மலர்கின்றது... இந்த புனித நிலையைக் கொண்டவர்கள்தாம் மகரிஷிகளும், சித்தர்களும், யோகியர்களும், ஆவர். எங்கு உண்மை, நேர்மை, சத்தியம், தர்மம், ஈவு, இரக்கம் காருண்யம் நிறைந்திருக்கின்றதோ அவ்விடத்தில் இந்த ஆத்மா பிரகாசிக்கும்.. இதனால் இந்த ஆத்மாவைத் தாங்குகின்ற உடலும் தேஜோமயமாய் விளங்கும். அன்பு எனப்படும் பக்தி நிறைந்த இவர்களால்தான் தேஜஸ்விகள் பிரவேசா தேஸ்விகளாக மலர்கின்றனர்..
அப்படியானால் சித்தோபநிஷத்தில் உயிரை எப்படி விளக்குகின்றார்கள்? ஆத்மாவை உணர வைப்பதற்கான கருவிதான் உயிராகும்.. உத்தம நிலைகளில் வேறு சில வழிகளிலும் ஆத்மாவை உணரலாம். மகான்கள், சித்தர்கள் யோகிகள் யாவரும் உயிரைத் தாங்கும் உடலைக் கொண்டு ஆத்ம ஜோதியைத் தரிசிக்கின்றார்கள்...
அப்போது ஆத்ம ஜோதியின் இருப்பிடமாக உணர வைப்பதாக உயிரை உணர்வதால் அவர்கள் அவ்வுடலில் உயிர் கொண்டாலும் இல்லாவிடினும் இரண்டுமே அவர்களுக்கு ஒன்றாகத்தான் தோன்றும்.. எனவேதான் அவர்களுடைய உடலில் துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை அவர்கள் உணர்வது கிடையாது.. ஆனால் நாமோ உயிரையும் ஆத்மாவையும் பிரித்துக் காண்பதால் உயிரைத் தாங்குகின்ற உடலில் துன்பங்களைத்தான் உணர்கின்றோம்.
நிலையான ஆத்மாவானது நிலையற்ற உடலில் குடி கொண்டிருக்கின்றது என்பதை உணராது இந்த வாடகை (தேக) வீடு நிரந்தரமானது என்று உயிரில் பற்றுதல் கொள்வதால் உடலுக்கே முக்கியத்துவம் தந்து உள்ளே பிரகாசிக்கும் ஆத்மாவை மறந்து விடுகின்றோம்... இந்த ஆத்ம ஜோதி எப்போதும் உடலில் தங்குமா? அவ்வப்போது வெளிச் செல்வதும் உண்டு... அதாவது வெளியேறுகையில் ஆன்ம மறுபதிப்பை (reflected soul attribute) வைத்துச் செல்கின்றது.. இவ்வாறு ஆத்ம ஜோதியை உள்வைத்து வெளிச் செலுத்தும் (soul transportation, soul transmission, soul transfusion) கலைகளை அறிந்தவர்கள் தான் ஞானிகள் ஆகின்றனர்.
ஆத்ம ஜோதி வெளிச்சென்றால் உயிர் உடலில் தங்குமா அல்லது உயிரற்ற சடலம் ஆகிவிடுமா? ஒரு மனிதன் கொடூரமான தீய செயல்களைச் செய்யும்போது புனிதமயமான ஆத்ம ஜோதி வெளிச் சென்று விடுகின்றது... அப்போது தன்னுடைய உபகருவிகளையும் ஆன்ம மறுபிரதியையும் உடலினுள் உப அம்சங்களாக வைத்துச் செல்கின்றது. இதனால்தான் மனிதன் மனிதனாக வாழாது பூச்சி, புழுக்கள், மிருகங்கள், பறவைகள், தாவரங்களைப் போன்று பகுத்தறிவு குறைந்தாற் போல் நடந்து கொள்கின்றான்.
தன்னுள்ளே இருக்கின்ற ஆத்ம ஜோதி வெளிச் செல்லா வண்ணம் அதனைப் புனிதமாக வைத்திருப்பதற்காக ஒரு மனிதன் நல்லொழுக்கத்துடன், இறைத் திருப்பணியுடனும் தெய்வீகமாக வாழும் போதுதான், ஆத்ம ஜோதி அவனிடம் இருக்கின்ற நேரம் பெருகப் பெருகத்தான் அவன் தெய்வீகத்தில் மிளிரத் தொடங்குகின்றான்.
எனவே சற்குருவின் முதல் பணி என்னவென்றால் ஒவ்வொருவரிடம் உள்ள ஆத்மஜோதி அடிக்கடி வெளிச் செல்லா வண்ணம் அதற்குரித்தான புனிதமான சூழ்நிலைகளை அவனிடம் பதிய வைப்பதுதான். அன்னதானம், இலவசமருத்துவ உதவி போன்ற புனிதமான பணிகளில் அடியார் ஈடுபடும்போது அவரிடம் உள்ள ஆத்மஜோதி அந்தப் புனிதப் பணிகளின் காரணமாக வெளிச் செல்லாது அவருக்குள்ளேயே இருக்கின்றது.. எனவே எந்த அளவிற்குப் புனிதமாக இருப்பதற்கான இறைப்பணிகளை மேற்கொள்கின்றோமோ அந்த அளவிற்கு ஆத்ம ஜோதியையும் நம்முள் நிலை நிறுத்திக் கொள்ளலாம்... இல்லையெனில் ஆத்மப் பிரதிபலிப்புதான் உள்நிற்கும்... இதை உணர்ந்தால்தான் அடுத்தபடியான உத்தம நிலைகளுக்குச் செல்ல முடியும்.
குரு: ஒரு மனிதனுடய பூர்வ ஜன்ம கர்மவினைகளுக்கேற்பவே மனைவி, மக்கள் உற்றம், சுற்றம் அமைகின்றனர். தற்போது மனைவியாக வாய்த்திருப்பவள் முன்னொரு பிறவியில் எவ்வகையிலோ உறவு கொண்டிருக்கலாம். எனவே அம்மனிதன் இப்பிறவியில் தன் மனைவியுடன் பழகும் அவனுடைய பழைய பிறவிக்குறித்தான சூட்சும சரீரம் இயங்குகிறது. இவ்வாறாகவே தன் குழந்தைகள், உற்றம்.., சுற்றம் ஆகியோருடன் பழகும் போது அவரவர் பின்னணிக்குரித்தான பிறவியைச் சார்ந்த சூட்சும சரீரம் இயங்குகிறது.. இதனைச் சாதாரண முறையில் புரிந்து கொள்ள முடியாது!
அடியார்: அப்படியானால் ஒரு மனிதனுடைய சரீரத்தில் அடிக்கடி சூட்சும சரீரங்களின் இயக்கங்கள் மாறிக்கொண்டே இருக்குமல்லவா ?
குரு: எவனொருவன் தன் ஸ்தூல தேகத்தில் உறையும் சூட்சும சரீரத்தின் தன்மையை உணர்கின்றானோ, அவனே தன்னை அறிந்தவன். ஆயிரமாயிரம் சூட்சும சரீரங்கள் இயங்கும் ஒரு மனித இயந்திரமே ஸ்தூல சரீரம் என்பதை அனுபவபூர்வமாக உணர வேண்டும். இதற்கான நிலைகளே தியானம், யோகம் போன்றவையாகும்.
முதலில், இரவில் உறங்கும் முன், இறைத் துதிகளை ஓதிக் கடவுளை வணங்கிய பின், ஒவ்வொருவரும் அன்றைய நிகழ்ச்சிகளை, காலையில் எழுந்தது முதல்.. தன் மனக்கண் முன் ஒவ்வொன்றாகக் கொணர்தல் வேண்டும். அது தினசரி நிகழ்ச்சிகளாக, கடமையாக, பல் துலக்குதல், நீராடுதல், பேப்பர் படித்தல் போன்றவையாக இருந்தாலும் கூட அன்றைய நிகழ்ச்சிகளை மனக்கண் முன் தத்ரூபமாக அப்படியே கொணரும் போதுதான், அவரவர் உருவம், மனதினுள் நன்கு புலப்படலாகும். இந்த சுயதேவவள தரிசனப் பாங்கையே “மனக்கண்ணாடிப் படனம்” என்பர்.
ஒவ்வொருவரும் தன் உருவத்தைக் கண்ணாடி இன்றித் தன்னுள் நன்றாகப் பார்க்க வல்ல யோகசக்திகளைப் பெறவும் ஆத்ம விசாரம் உதவுகின்றது.
ஒருவர் தன்னுடைய அன்றாட நிகழ்ச்சிகளை மனக்கண் முன் கொணரும் போது, சில நிகழ்ச்சிகளில் மட்டும் மனம் நெடுநேரம் தங்குவதைக் காணலாம்! அந்த நிகழ்ச்சிக்கான காரணத்தை தன்னுள்ளேயே காணத் தொடங்குவதும் ஆத்ம விசாரமே! இவ்வாறு அன்றன்றைய நிகழ்ச்சிகளை அன்றே ஆராய்கையில்தாம், இறைச் சிந்தனையே இல்லாத இயந்திரமாக, அறிவுப் பாங்காய் இயங்காத இயந்திர கதியாக, அலைபாயும் மனத்துடன் இயங்கியதைக் கண்டு அவரவர் வியப்பர், வருந்துவர், திருந்த முயல்வர்.
ஆத்மவிசாரம் ஒரு மனசுத்தி சாதனமே!
ஒவ்வொருவரும், பல விஷயங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாது. மனதிலேயே அடக்கும்போது, காலப் போக்கில், எண்ணங்கள் பாசம் பிடித்த கற்களாய் மனதில் ஆழமாகப் பதிந்து, நாளடைவில், இடிந்த சுவர்கள் போலும், பல எண்ணங்கள் பாறையாகவும் ஆகி, மன வீடு அலங்கோலமாக ஆகி விடும்.
ஆத்ம விசாரத்தில் இவை மெதுவாக ஆனால் உறுதியாகக் களையப் பெறுகின்றன. அந்தந்த நாள் மனப்பசியை அந்தந்த நாளில் சுத்தம் செய்து விட்டால் மனவீடு நாளடைவில் சுத்தமாகிவிடும். எனவே ஆரம்ப நிலையில் ஆத்மவிசாரம் ஒரு மன சுத்திகரிப்புச் சாதனமாகவும் அமைகின்றது! எனவே ஆத்ம விசாரம் எனும்போது மன சுத்தி, எண்ணப் பாசிகளை அகற்றுதல், பல்லாண்டுகள் பாறை போல் இறுகியுள்ள எண்ணக் கற்களை அகற்றுதல் போன்ற பல உப பலன்கள் கிட்டுவதால், ஆத்ம விசாரம் என்பது இறைமையை நோக்கி இயக்கும் இயக்கமும் ஆகின்றது!
தினமும் சிறிதளவேனும் அன்னதானம் செய்து வருதலும் ஓர் உத்தம அன்னயோகப் பூஜையாகும். உண்ணா நோன்பாகிய விரதங்களைக் கடைபிடித்தால்தான் “பசி” என்றால் என்ன என்பதை ஆன்மப் பூர்வமாக உணர்ந்து, பிறர் பசியை ஆற்றும் தர்மச் சிந்தனை பெருகி, அன்னதானம் மூலமும் மோகத்தை, பேராசனைகளை, நிராசைகளை, காமகார மனதைச் சுத்திகரித்திடலாம்.
ஆத்ம வலம்
உன்னுள் இருப்பது இறைவன் அந்த இறைவனுக்குச் சேவை செய்யவே விரும்புகிறேன்,” என்று ஸ்ரீவாத்யார் கூறுவார்கள். நம்முள் இருக்கும் இறைவனை வலம் வந்து வணங்குவதே ஆத்ம வலம் என்னும் வழிபாடாகும். மனித உடலில் இருக்கும் ஆத்மா என்ற இறைவனை, இறைவனாய் இருக்கும் ஆத்மாவை வலம் வந்து வணங்குவதே பூரு பூஜ்ய சக்திகள் மனிதனை அணுகா வண்ணம் காத்துக் கொள்ளும் சிறப்பான வழிபாடாகும்.
இது மனதளவில் செய்யப்படும் மானசீக வழிபாடு. அவரவர் மனோ பலத்தைப் பொறுத்து இதை சக்தி வாய்ந்த வழிபாடாக மாற்றிக் கொள்ள முடியும்.
வழிபாட்டின் ஆரம்ப நிலையில் நமது ஆத்மாவை ஒரு இருண்ட அறையில் தனியாக ஒளி வீசும் ஒரு அகல் விளக்கு தீபத்துடன் ஒப்பிட்டு அதை வலம் வருவதாக மனதினுள் தொடர்ந்து நினைத்து வழிபடுவதே ஆத்ம வலமாகும்.
விரும்பினால் மானசீக வலத்துடன் கீழ்க் காணும் காயத்ரீ மந்திரத்தை வாய் விட்டோ, மனதிற்குள்ளோ ஓதி வரலாம்.
ஓம் தத் புருஷாய வித்மஹே ஆத்ம ஜோதி ப்ரகாசாய தீமஹி
தந்நோ ஆத்ம ஜோதி ப்ரசோதயாத்.
வழிபாடு தீவிரம் அடையும்போது அவரவர் ஆத்மாவை தரிசனம் செய்யும் சக்தி இயற்கையாகவே வந்து சேரும். அப்போது வழிபாட்டின் முறையும் மாறுபாடு அடைவது இயற்கை.
திருஅண்ணாமலை, ஐயர் மலை, பழநி மலை போன்ற மலைத் தலங்களில் கிரிவலம் வருபவர்கள் மனதினுள் ஆத்ம வலம் செய்தவாறே மலை வலத்தையும் மேற்கொள்வதால் அவர்கள் கிரிவலத்தின் பலன் பன்மடங்காய்ப் பல்கிப் பெருகும். பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதைப் போல மன வலமும் உடல் வலமும் இணையும்போது அதனால் விளையும் பலன்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
தங்கள் ஆத்மாவை ஜோதியாக தரிசனம் செய்து ஆத்ம வலம் வரும்போது அந்த ஜோதியில் தங்கள் மனைவி மக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் என தாங்கள் விரும்பும் அனைவரின் ஆத்ம ஜோதியையும் தங்கள் ஆத்ம ஜோதியுடன் இணைத்துக் கொள்ளலாம்.
ஆத்ம வலத்துடன் காயத்ரீ மந்திரத்தை ஓத விரும்பினால் அதையும் இணைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, ஒருவருடைய மனைவி கமலாவையும், மகன் சுகுமாரையும் தன்னுடைய ஆத்ம ஜோதியில் காயத்ரீ மந்திரத்தின் மூலம் இணைத்துக் கொள்ள விரும்பினால், அவர்
ஓம் தத் புருஷாய வித்மஹே ஆத்ம ஜோதி ப்ரகாசாய தீமஹி
தந்நோ கமலா ஜோதி ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித்மஹே ஆத்ம ஜோதி ப்ரகாசாய தீமஹி
தந்நோ சுகுமார ஜோதி ப்ரசோதயாத்
என்று ஓதி ஆத்ம வலம் வரலாம். இவ்வாறு தங்கள் நண்பர்கள் உறவினர்களின் பெயர்களுக்குரித்தான காயத்ரீ மந்திரத்தை ஓதி ஆத்ம வலம் வருவதும் அற்புதமான பலன்களை சித்திக்கும்.
நோயால் வாடுபவர்களுக்கும், தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கும் மேற்கூறிய ஆத்ம வல வழிபாடு அற்புத பலன்களை அளிக்கும். குறைந்தது ஒரு மணி நேரமாவது காயத்ரீ மந்திரம் ஓதி அவர்களுக்காக வலம் வர வேண்டியது அவசியம். more infoz - http://kulaluravuthiagi.org/pooru.htm
We use cookies to analyze website traffic and optimize your website experience.