ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை! ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை! ஓம் ஸ்ரீகுருவே சரணம்!
யோகியரின் சங்கல்பம், ஞானியரின் ஆக்ஞை, பரமஹம்ஸர்களின் பவித்ரத்வம், ரிஷிகள் ரிஷிபத்நீயரின் ஓங்கார ரீங்காரம், ஜீவன் முக்தர்களின் விக்ஞாபனம், முமூக்ஷுக்களின் நாதம், மோக்ஷ முக்தர்களின் கீதம், விதேக முக்தர்களின் பரதாளம், மஹான்களின் ஆச்சார்ய அனுகிரகம், வசுருத்ராதித்ய பிதுர், பிதுர் பத்நீயரின் ஸ்வாகதம்,கேதாரகிரி பாராமாசி தவசிகளின் யோகபலம் - இன்னோரன்ன மஹானுபவர்களின் ஆசியுடன் நிறைந்த திருவருளை பூலோகத்தார்க்கு வர்ஷிக்கும்படியாய்ச் சங்கல்பித்து ஆற்றும் அரியபல அன்னதான முறைகள், வகைகள், பலாதிபலா பலன்கள் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் சித்த ஏடுகளிலிருந்து...
சிறு குறிப்பு தொகுப்புகள்..!
அடியார் : குருவே! பல்வேறு வகையான உணவுகளை அன்னதானத்தில் வழங்குவதன் தாத்பர்யம் என்ன?
சற்குரு : ஏழைகளின் ஏக்கங்கள் பெரும்பாலும் உணவு, உடையைச் சார்ந்தே இருக்கும். இறைவன் அவர்களுடைய ஏக்கங்களை நிறைவேற்றுவதற்கு நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றார். “இந்த சரீரம் இதற்காகவேனும் பயன்படுகின்றதே!” என்று மகிழ்ந்து இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். இதுவே நாம் கடமையாகச் செய்வது! இதனையே அன்னதானம் என்று பிறர் சொல்கின்றனர்.
நாம் நம் வீட்டில் எந்தத் தரத்துடன் ருசியுடன் சமைத்துச் சாப்பிடுகின்றோமோ அதே அளவில் ஏழைகளுக்கும் அளிக்க வேண்டும்.
இன்ன்றைக்கு நம் மூதாதையர்களின் ஆசியினால் தான் மூன்று வேளை உணவு, காபி, டீ அனைத்தும் நமக்கு கிட்டுகின்றன. நம் மூதாதையர் சிறப்புற தான தர்மங்களை செய்து வந்ததின் பயனே நாம் அனுபவிக்கின்ற சுகங்களாகும். அப்படியானால் நம் சந்ததியினர் நம்மைப் போல் வசதியுடன் வாழ வேண்டுமெனில் நாம் தான தர்மங்கள் செய்ய வேண்டுமல்லவா? ஆனால் இதுகூட ஒருவிதத்தில் சுயநலங்கூடிய குறுகிய கண்ணோட்டமாகும்.
உண்மையில், அன்னதானம் பெற வருகின்றவர்கள் நம்முடைய முந்தைய பிறப்புகளின் உறவினர்களே! முந்தைய பிறவிகளின் நம்முடைய பெற்றோர்கள், பிள்ளைகள், மனைவி, மக்களே, உறவுகளே இன்றைக்கு அயலாராக அன்னதானம் பெற்றுச் செல்கின்றனர். அப்படியானால் எத்தனை பேருக்கு நாம் உணவிட வேண்டிய கர்மப்பாக்கிகள் காத்துக்கிடக்கின்றன என்பதையுணர வேண்டும்.
ஆயிரக் கணக்கானோருக்குத் தனிப்பட்ட முறையில் உணவளித்து நம் (குறிப்பிட்ட) கர்மவினைகளைத் தீர்ப்பது சாத்தியமானதா? ஆனால் பலர் ஒன்றுகூடி சத்சங்க முறையில் அன்னதானம் புரிந்திடில் அதன் பலன்கள் ஆயிரக்கணக்கானோரைச் சென்றடையும் அல்லவா?
மேலும், புனிதமான எண்ணங்களுடன் கூலிக்குப் பணி என்றில்லாது சேவை மனப்பான்மையுடன், இறை நாமம் ஜெபித்தவாறே தயாரித்து அளிக்கப்படும் உணவிற்குப் பல தெய்வீக சக்திகள் உண்டு. ஒன்று ஆயிரம் ஆகப் பெருகும். திருஅண்ணாமலைத் திருத்தலத்தில் ஸ்ரீ அண்ணாமலையே சாட்சியாக நிற்க அளிக்கப்படும் அன்னத்தின் மஹிமையை எடுத்துரைக்கப் பிறவிகள் போதா!
கோடிக்கணக்கான கர்ம் வினைகளைத் தீர்க்கவல்ல திருஅண்ணாமலை கிரிவலத்தின் திருப்பாதையில் யோகியர் மஹான்கள், சித்த புருஷர்கள், ஞானிகள் போன்றோர் எப்போதும் எந்நேரமும் திருவுலா செல்கின்றனர். அவர்தம் புனித தேகத்தில் ஊடுருவிய சிறு காற்று நம்மீது பட்டால் கூடப் போதும், நாம் கடைத்தேறி விடலாம். இத்தகைய அன்னதானக் கைங்கர்யத்தை அவர்களே நேரில் ஏதோ உருவில் வந்து உணவை பெற்றாலே போதும், அவர்தம் ஆசி அனைவரையும் சென்றடையும்.
இறைவனுக்கு அளிக்கப்படும் நைவேத்யம் போல் அவர்கள் உண்ணும் அன்னதான உணவு பிரசாதமாகிட அவர்களின் போற்றற்கரிய அருளாசி ஏழைகளைச் சென்றடையும். இந்த ஆசியின் மஹிமையால் பல்லாயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் ஏழ்மையிலிருந்து விடுபட்டு நன்னிலை பெறும்.
பலன்கள்
உதாரணமாக சேனைக்கிழங்கு சாதம் அளித்திட்ட அதை அளிப்போர், பெறுவோர் இருவகையினருக்கும் குடல்வாய் சம்பந்தமான எத்தகைய கொடிய நோய்களுக்கும் பரிகாரம் கிட்டும்.
வெண்டைக்காய், டபுள்பீன்ஸ் போன்ற உணவு வகைகளை அளித்திடில் அதைப் பெறுவோர் அளிப்போர் குடும்பங்களில் உள்ள மனோவியாதித் துன்பங்கள் நீங்கும்.
அன்னதானத்தில் விளையும் அற்புதங்களைப் பார்த்தீர்களா? ஒவ்வொரு உணவுவகையின் தெய்வீகத் தன்மையும், அதன் ஆன்மீக இரகசியங்களையும் விவரித்துக் கொண்டே செல்லலாம்.
இவ்வாறாக ஒரு அன்னதானத்தின் பின்னணியில் நிகழ்கின்ற ஆயிரமாயிரம் விந்தைகளை ஒரு சத்சங்கம் மூலமாக சற்குரு ஒருவரே நடைமுறையில் எடுத்துக்காட்டி ஊக்குவித்து அடியார்களுக்குப் புண்ய சக்தியுடன் உயர்ந்த ஆன்மீக நிலைகளையும் அளிக்கின்றார்.
மானுட தேகத்தில் சற்குருவைச் சார்ந்து நற்பணிகளை ஆற்றிட, மேலுலகில் தேவர்கள், பித்ருக்கள் போன்ற உயர் நிலைகளை அடையலாம். ஒரு பித்ரு தேவராக உயர்நிலை அமைந்திடில், பித்ரு லோகத்திலிருந்து கொண்டு லட்சக்கணக்கானோருக்கு நல்வழி காட்டலாமன்றோ! இதற்குரித்தான அடிப்படை நிலையே சற்குரு காட்டும் சத்சங்க இறைப் பணிகளாகும்.
எறும்பிற்கு உணவு (ரவை, சர்க்கரை, குருணை) – கடன் தொல்லை தீரும்.
குழந்தைகளுக்குப் பால் – குழந்தை பாக்கியம் கிட்டும்.
குருடர்களுக்குச் சேவை /தானம் – இருதய நோய்கள் அகலும்.
எருமை மாட்டிற்கு மக நட்சத்திரத்தன்று தண்டு கீரை தானம் – எம பயம் அகலும்.
தயிர் சாதம் – வயிற்று நோய்கள் நீங்கும்.
கீரை உணவு – பற்களுக்குப் பாதுகாப்பு
பசுவிற்குக் கீரை – ஆண்மை குறைவு அகலும்
கோதுமை சப்பாத்தி – தோல் வியாதிகள் தீரும்.
இட்லி – குரு அருள் கிட்டும்.
ஷோடசோபசார பூஜை எனப்படும் 16வித பூஜா அம்சங்கள் சற்றுக் கடினமானவை. ஆனால் அன்னதானத்திற்கான சரீர சேவையில் உடலின் அனைத்து அவயங்களும் ஈடுபட்டு, மனமும் ஒன்றுபடுவதால் ஷோடசோபசாரபூஜையின் அனைத்து அங்கநியாஸ, கரநியாஸ முறைகளும் அன்னதானத்திலேயே அடங்கி விடுகின்றன. தியானத்தில் மனம் ஒருமைப்படுவதற்கு இறைவனைப் பற்றி மட்டுமே எண்ணியிருப்பது என்பதல்ல. அன்னதான சமையலில் இறைநாமத்தை ஜபித்தவாறே, அன்னதான உணவு நன்றாக அமைய வேண்டும் என்று உன்னிப்பாகச் செயல்படுவது கூட ஒரு முக்கிய தியான மனோ நிலையின்பால் பட்டதாகும்.
ஆயிரம் பேருக்குத் திருஅண்ணாமலை திருத்தலத்தில் உணவளித்தால் ஒரு சித்புருஷரோ, மஹரிஷியோ, யோகியோ நிச்சயமாக வந்து அன்னத்தைப் பெற்று ஆசி கூற வேண்டும் என்பது இறைநியதி. ஒரு சித்புருஷரோ, மஹரிஷியோ, யோகியோ அன்னத்தை ஏற்றால் போதுமே அவருடைய ஆசீர்வாதத்தால் லட்சக்கணக்கான, கோடிக் கணக்கான ஜீவன்களுக்கு அருளாசி கிட்டுமே என்ற இறைப் பெரும் வரத்தை எண்ணித்தான் திருஅண்ணாமலையில் அன்னதானத்தை இடுதல் மிகவும் விசேஷமானது என்று காலங்காலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது!
ஸ்ரீஅமிர்த தன்வந்த்ரீ மூர்த்தியைத் துதித்து மருத்துவ தேவர்களின் நோய் நீர்க்கும் த்ரிபர்ணவ மண்டல காலம் பரந்து விரிந்திடும் விடியற்காலை வேளையில், நெடுநாள் நின்றுய்யும் வகை உணவு திரவியங்களாக அமைகின்ற சிறு திராட்சை (கிஸ்மிஸ்), முந்திரி, கருப்பு திராட்சை, கருப்பு கிஸ்மிஸ், கிராம்பு போன்றவை கலந்த நல்ல உணவு வகைகளை காலைச் சிற்றுண்டியாக காலை 7.30 மணிக்குள் அன்னதானமாக அளித்துவர வேண்டும்!
ஏனென்றால் இரவில் பலலோகப் பயணங்கள் புரிந்திருக்கும் தேகத்தின் முதல் பசி தீர்க்கும் முதல் உணவிற்கு மகத்தான அன்னதானப் பலன்கள் உண்டு.! இவை மேற்கண்ட பர்ணவ சத்துள்ள உணவெனில் இவற்றிற்கு நோய் தீர்க்கும் சக்திகள் அதிகமாகும்.!
உயிர்காக்கும் மா மருந்தே சர்வ ஜனார்தனப் புண்ய சக்தி! எங்கள் சந்ததியைச் சார்ந்த ஒருவர் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கின்றார், அவரைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுவார்கள்.. ஆனால் அங்கெல்லாம் புண்ய சக்திகளின் வகைகளுள் ஒன்றான சர்வ ஜனார்தனப் புண்ய சக்தி என்ற அபூர்வமான புண்ய சக்திதான் இச்சமயத்தில் தக்க உதவி செய்யும், அன்னதானம், ஏழைக்கான இலவச மருத்துவ உதவி, இலவச திருமண உதவி, இலவசக் கல்வி போன்ற பலவிதமான இறை சமுதாய சேவைகளில் ஒருவர் ஈடுபடும்போது இந்த சர்வ ஜனார்தனப் புண்யசக்தி நிறைய உருவாகின்றது.!
எவ்வாறு மின்சக்தியானது அணு உலையிலிருந்தும், நிலக்கரியிலிருந்தும் பல வகைகளில் தோன்றுகின்றதோ, இவ்வாறுதான் ஒருவரின் உயிரைக் காப்பாற்றத் தேவையான ஔஷதாம்ருத சக்தியைப் பெறும் பலவகைகளில் அன்னதானத்திலிருந்து கிட்டுகின்ற ஒருவித விசேஷமான புண்ய சக்தியே உயிர் காத்திடப் பெரிதும் உதவுகின்றது.. இதற்காகத்தான் அறிந்தோ, அறியாமலோ ஏதேனும் அன்னதானத்தை நாம் எப்போதும் தினந்தோறும் செய்து கொண்டிருக்க வேண்டும்.. அல்லது அன்னதானத்தை திறம்படச் செயற்படுத்தும் ஆஸ்ரம, சத்சங்க இறைப் பணிகளில் சரீர சேவையாகவோ, பொருட்சேவை மூலமாகவோ அடிக்கடி பங்கு பெறவேண்டும்.!
அன்னதானம் எவ்வகைகளில் எல்லாம் செய்யப் படுகின்றதோ அவை 5 வயது முதல் ஆயுள் முடியும் வரையும் அதற்கு மேலும் உதவுகிறது என்பதை இனியேனும் உணருங்கள். அன்னதானம் செய்ய வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் நழுவ விடாதீர்கள்..! இதற்காகத்தான் ஒரு நாளில் நீங்கள் உறங்கச் செல்லுமுன், குறைந்தது ஒரு உணவுப் பொட்டலமேனும் அன்னதானம் செய்தபின் மட்டுமே அந்நாளை முடிப்பது என்பதை வைராக்யமாகக் கொள்ளுங்கள்..! நீங்கள் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லும் சாப்பாட்டுப் பையில், காரியரில் அன்னதானத்திற்கென ஒரு பொட்டலத்தை எடுத்துச் சென்று தானமாக அளித்து விடுங்கள். இது ஒன்றும் கடினம் கிடையாது...! இவ்வாறு சிறுகச் சிறுக நீங்கள் சேர்க்கும் அன்னதானப் புண்ய சக்தியே உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் அபாயமான கட்டங்களில் மிகவும் மோசமான, கவலைக்கிடமான நோயினின்றும், விபத்திலிருந்தும் கட்டாயம் காப்பாற்றும்.!
“நீ உன்னோட வாழ்நாள் முழுதும் எவ்வளவு படி அரிசி, காய்கறி சாப்பிடறியோ அந்த அளவாச்சும் நீ அன்னதானம் செய்தாகணும். எவ்வளவு லிட்டர் தண்ணீர் குடிச்சியோ அந்த அளவுக்கு நீ நீர்தானமோ, நீர்மோர் தானமோ பண்ணியாகணும். இது செஞ்சாலே போதும் தேவகடன், ரிஷிகடன், பித்ருகடன் எல்லாம் தீர்ந்துடும்! இது மட்டுமே உன்னோட வாழ்க்கை லட்சியமாக வச்சுகிட்டு வாழ்ந்தாலே போதும், இறை தரிசனம் நிச்சயமாக கிடைக்கும்! நீ சுயமா சம்பாதிச்சு, நீனே உழைச்சு பண்ணனும்!”
அப்படீன்னா ஒரு கோடீஸ்வரன் ஒரே நாள்ல இந்த மாதிரி பண்ணிட்டா அவனுக்கு உடனே இறைதரிசனம் கிடைக்குமான்னு கேட்கத் தோணுதா?
பார்த்தாயா, ஒரு குரு ஒண்ணு சொன்னார்னு அதை உடனே மனசு ஏத்துக்காமா அவனுக்கு அது கிடைக்குமான்னு மத்தவனைப் பத்தி சந்தேகம் தானே முதல்ல வருது! குருமேல முழு நம்பிக்கை வராத வரைக்கும் இந்த மாதிரி அலைபாயும் மனசு தான் உன்னைப் படாதபாடு படுத்தும்!
கோடீஸ்வரனா இருந்தாக்கூட இதே சட்டம்தான்! ஆனா அதுக்கப்புறம் அவன் தனக்கு குரு சொன்னபடி இறை தரிசனம் கெடச்சுடிச்சுங்கற - நம்பிக்கையோட வாழணும்! அதுல ஒரு பிட்டு கூட சந்தேகம் வரக் கூடாது. சந்தேகம் வந்தால் அது குரு துரோகத்துக்கு ஈடான தோஷமாகும்”. இவ்வாறு எத்தனையோ விளக்கங்களை நேருக்கு நேராகத் தந்து நம்மோடு ஒருவராய் நம்முள் ஒருவராய் உள்ளும் புறமும் உறைந்து அருள் வழிகாட்டுகின்றார் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்!
மந்தார இலைக்கு மந்திரங்களை கிரகிக்கும் சக்தி உண்டு. பட்டுக்கோட்டையின் அருகே திருவுசாத்தானத்தில் ஸ்ரீமந்திரபுரீஸ்வரராக அருள்பாலிக்கின்ற சிவபெருமானின் திருக்கோயிலில் (இதுவும் ஒரு பித்ரு முக்தி ஸ்தலம்) மந்தார இலையில் பித்ருக்களுக்கு ப்ரீதியான பித்ரு சக்தி நிறைந்தவற்றை தானமாக அளித்திட பித்ரு ஆசிகள் பெருகி குடும்பத்தில் அடிக்கடி பலரும் நோய்வாய்ப்படுவது தீர்வடையும்.. இதற்குக் காரணம் ஸ்ரீராமருக்கே மகா மந்திரங்களை உபதேசித்தவராக ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் அருள்புரிவதாலும், மந்தார இலைக்கு வேத மந்திர சக்திகளை கிரகிக்கும் சக்தி உண்டு என்பதுமாம்.! எனவே மந்தார இலையில் பிரசாதம் என்பது பெறுதற்கரிய பாக்யம், இதை வேண்டாமென்று ஒதுக்கிடில் வேத மந்திர சக்தியையே ஒதுக்கி வைத்ததாகும் அல்லவா? நம்மால் இல்லத்தில் வேத மந்திர சக்திகளையே பெற இயலாதபோது இறைப் பரிசாக வருகின்ற மந்தார இலைப் பிரசாதத்தை துச்சமாக மதித்திடலாமா?
இதற்காகத்தான் நீங்கள் வேத சக்திகள் நிறைந்த மந்தார இலையில் கட்டப்பட்ட ஒரு உணவுப் பொட்டலத்தையாவது தினந்தோறும் அன்னதானமாகப் பிறருக்கு அளியுங்கள்.. இதற்காகவே, நிறைய மந்தார இலைகளை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். காலை, மதியம், மாலை அல்லது இரவு எந்த நேரத்திலும் அலுவலகத்திற்கோ, கடைக்கோ செல்லும்போது ஒரு உணவுப் பொட்டலத்தையாவது எடுத்துச் சென்று பிறருக்கு அளியுங்கள்..!
ஆன்மீகத்தில் இதற்கும் மிகமிக எளிமையான தீர்வைத் தந்திருக்கின்றார்கள்.., உடல் நோய் காரணமாக எந்த உணவுப் பண்டங்களை உங்களால் நிறைய உண்ண முடியவில்லையோ, எந்த உணவுப் பொருளின்மீது உங்களுக்கு அபரிமிதமான ஆசையும் மோகமும் பெருகிவிட்டதோ, அந்த உணவுப் பண்டத்தையே பிறர் நன்கு திருப்தியுடன் சாப்பிடும் வண்ணம் நிறைய அன்னதானம் செய்திடுங்கள். உதாரணமாக, உயர்ந்த இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் வெண்ணெய், நெய் கலந்த உணவுப் பண்டங்களை (நெய் தோசை, வெண்ணெய் ஆடை போன்றவை) நிறைய அளவில் தானம் செய்திடுங்கள், அதேபோன்று சர்க்கரை வியாதியஸ்தர்கள் மைசூர்பாகு, லட்டு, அல்வா போன்ற இனிப்புப் பொருட்களை நிறைய தானம் செய்ய வேண்டும்.. இத்தகைய அன்னதானத்தில் எழுகின்ற புண்ணிய சக்தியானது உங்களுடைய ஆசைகளைத் தாமாகவே தணித்துவிடும்..!
‘பிரசாதத்தை மீதம் வைத்து விடுகின்றார்களே, வேஸ்ட் ஆகின்றதே’ என்ற எண்ணத்தையெல்லாம் தவிர்த்து விட வேண்டும்.., இதற்காக வாங்குபவர்கள் பிரசாதத்தை வைத்து விட்டுச் செல்வதை நியாயப்படுத்த முடியாது.. கீழே சிந்துகின்ற அன்னப் பிரசாதத் துகள்கள் கூட மண்ணோடு மண்ணாகி எறும்பு, புழு போன்ற ஜீவன்களுக்கும் உணவாகின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.. மறுநாள் எத்தணையோ பறவைகள், நாய்கள் போன்றவை கூட இறைப் பிரசாதத்தை உண்டு உத்தம இறைநிலைகளை, அடைவதை நம்மால் பகுத்துணர முடிவதில்லை... மேலும் மறுநாள் இலைகள் ஒன்று சேர்க்கப்பட்டு அக்னியில் பஸ்மமாகும் போது அன்னசக்தியும் மந்தார இலைகளின் வேத சக்தியும் விண்ணில் கலந்து பரவெளியைப் புனிதமாக்குகின்றன..!
சம்பளப் பணத்தை முதலில் பெற்ற தாயிடம், மனைவியிடம் அளித்து உப்பு, புஷ்பம் போன்ற விருத்தி அடையும் பொருளை முதலில் வாங்க வேண்டும். வாங்கும் அரிசியில் முதல் பிடியை அல்லது படியை ஆலயத்திலும், அடுத்ததைக் குலதெய்வ பூஜைக்கும், மூன்றாவதை அன்னதானத்திற்கும் கொண்டிடுவதும் பண தோஷங்களைத் தடுக்கும். பணமும் நன்முறையில் விருத்தி ஆகும். கடனை அறவே தவிர்க்கும் நல்வழி முறைகளும் கிட்டும். வருடம் ஒரு முறையாவது தஞ்சை அருகே திருச்சோற்றுத்துறைச் சிவாலயத்தில் அன்னதானம் செய்திடில் உறவுமுறைக் கடன்கள் தீரும்.
தன் சம்பளத்தில், குறித்த தொகையை, மாதந்தோறும், வாரந்தோறும், நற்காரியங்களுக்கு அதாவது பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காக ஒதுக்கி வைத்துச் செலவிட வேண்டும். பத்தாயிரமோ, ஐந்தாயிரமோ சம்பளம் வந்தால் குறைந்த பட்சம் ரூ.100, ரூ50க்காவது தான தர்மம் செய்யும் மனப்பாங்கு வந்திடுதல் வேண்டும். அனைத்தும் தனக்கென வைத்து வாழ்வோர்க்கு திருடு, கொள்ளை, ஏமாற்றப்படுதல், ஏமாறுதல், எதிர்பாராத நஷ்டங்கள், வரிச் சுமைகள் போன்றவற்றால் அநாவசியமான பணப் போக்கு உண்டாகிக் கடன்கள் சேரும்.
செய்கின்ற, இயன்ற சிறு வகை அன்னதானத்திலும் தனக்கொன்று, பிறருக்கொன்று என்ற பாகுபாடு கூடாது! ஏனோதானோ என்று ஏதோ ஒரு பாயசத்தை (தண்ணீர் போல்) வைத்து நூறு பேருக்கு நிரவி அளிப்பதை விட, தான், தன் வீட்டில் நன்கு உண்பதைப் போல, நிறைய முந்திரி, திராட்சை, நெய் கூடிய, நல்ல சுவையான பாயசத்தை மாதம் ஒரு முறையாவது பத்து ஏழைகளுக்காவது அளித்தல் சிறப்பானது. பிறருக்கு மாதம் ஒரு முறையாவது பத்து ஏழைகளுக்காகவது அளித்தல் சிறப்பானது. பிறருக்கு ஈவதில் பாரபட்சம் காட்டுவதால், கொடுத்த பொருள் திரும்பி வராது. புதுக் கடன்கள் சேரலாகும். இதுவும் கடன் சேரும் வழியாகும். பொதுவாக ஆலயங்களில், கோசாலைகளில் பசுக்களை நீராட்டிப் போஷித்து வந்தால் நாள் பட்ட கடன் சுமை தணிய வழி பிறக்கும்.
கல்யாணம், கச்சேரி, நிச்சயதார்த்தம் என்று பல இடங்களிலும் கையை நனைத்து அநாவசியமாக ஓசியில் உணவு உண்டால் சோற்றுக் கழிக் கர்ம வினைகளே சேரும். இதனால் எதிர்காலத்தைப் பற்றிய பீதியும், அச்சமும் உடைய மனோநிலையை உண்டாக்கிவிடும். இதற்குப் பரிகாரமாக சுயம்புச் சிவலிங்கத்திற்குப் பௌர்ணமி தினத்தில் பச்சரிசி சோற்றுக் காப்பு இட்டு அன்னதானம் செய்து வரவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் திருமணம் நடப்பதற்கு முன் தஞ்சாவூர் அருகே திருச்சோற்றுத்துறையில் கண்டிப்பாக அன்னதானம் செய்ய வேண்டும்.
செயற்கை ரசாயனக் கலவை கூடிய காஸ் சிலிண்டர் அடுப்புகளில்தான் நகரப் பகுதிச் சமையல்கள் நிகழ்வதால், உணவுகளில் நல்சக்திகள் மாய்ந்து ரசாயன சக்திகளே உடலைச் சேருகின்றன. ஆனால் காலத்தை ஒட்டியும் வாழ்ந்தாக வேண்டுமே! இவற்றை நிவர்த்தி செய்ய அன்னதானப் புண்ய சக்திகளே ஆன்மீக ரீதியாகத் துணை புரியும். எனவேதான் தினமுமே பசு, காக்கை, நாய்களுக்கு உணவிடும் ஜீவகாருண்யமும், “தினசரி மூவருக்கேனும் அன்னமிடும்” நற்பழக்கமும் தினசரிக் கடமையாக நமக்கு நம் பெரியோர்களால் அளிக்கப்பட்டு, கால மாற்றங்களில் ஏற்படும் பல தன்மைகளுக்கு நிவர்த்திகளைத் தருகின்றது.
மூன்று கணேச மூர்த்திகள் துலங்குகின்ற உத்தமதானபுரம் திருச்சன்னதியில், மூன்று வகை இனிப்புகள், மூன்று வகை அன்ன வகைகள், மூன்று வகையிலான, பொறியல் போன்ற வெஞ்சனத்துடன் காய்கறிப் பண்டங்களை, வாழை இலை, மந்தார இலை, தாமரை இலைகளில் படைத்து, அன்னதானம் செய்தலால் பெண்களுடைய வெளியில் சொல்ல முடியாத வகையிலான உள்ளக் குமுறல்களுக்குத் தீர்வுகள் வந்தமையும்.
சுவாதி நட்சத்திர நாளில், 7, 16, 25 என்று ஏழின் வகைகளில் உணவு வகைகளையும், அன்னதானமாக அளிப்பதால், அலுவலகத்தில் ஏற்பட்டிருக்கும் பகைமை களைய தூமகேது விநாயகர் அருள்புரிகின்றார்.
We use cookies to analyze website traffic and optimize your website experience.