ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை! ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை! ஓம் ஸ்ரீகுருவே சரணம்!
அரசு, ஆல், பலா போன்ற தல விருட்ச இலைகளிலிருந்து வீழ்கின்ற மழைத் துளிகளும் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். புதன் கிழமையன்று. மழை பொழிந்து மாமர இலைகள் மூலமாக நம் உடலில் அந்த மழைத் துளிகள் சேருமேயானால் பல அரிய சித்திகளைப் பெற்றிடலாம். குறிப்பாக வேலையை இழந்தோர் மீண்டும் நல்ல பணியைப் பெற்றிட இந்த "மாஞ்சுடர்” தீர்த்த பூஜை உதவும்.
இதற்காகத்தான் இன்றைக்கும் இல்லறப் பூஜைகளில் கும்பபூஜை முடிந்தவுடன் கும்பத்திலிருந்து மாவிலைகளால் நீரைத் தெளிக்கின்ற நற்பழக்கம் நிலவி வருகின்றது. மாவிலைக்கு ஜலத்தில் உள்ள தெய்வீகச் சக்திகளைத் திரட்டி ஆசியாக அளிக்கின்ற அற்புதச் சக்தி உண்டு. காதம்பரி லோகத்தைச் சேர்ந்த பல தேவதா மூர்த்திகள் மாவிலையில் உறைவதைத்தான் விரும்புகிறார்கள்!
அதற்காகத்தான் கிரஹப்பிரவேசம், தைப் பொங்கல், திருமணம் போன்ற விசேஷமான நாட்களில் மாவிலைத் தோரணம் கட்டுகின்றோம், “துவார பாலக தனம்” என்று போற்றப்படுகின்ற மாவிலைக்கு நம்முடைய பிரார்த்தனைகளை கிரஹித்து ஆதிசக்தியின் ஸ்ரீசக்கர லோகங்களுக்கு அனுப்புகின்ற அபரிதமான தெய்வீகச் சக்தி உண்டு.
அதனால்தான் அருள்வாக்கு கூறுபவர்களும் கூட மாவிலைத் தழைகளால் கூடு அமைத்து அவற்றைப் பார்த்துக் குறி சொல்கின்ற வழக்கம்உண்டு. எனவே, மழைப் பொழிவிற்கு வருண பகவானுக்குரித்தான பூஜைகளில் ஸ்ரீநந்தி எம்பெருமானுக்கு மாவிலைத் தோரணங்களால் தேகம் முழுதும் மாலை அணிவித்து வழிபடுதல் சிறந்த மழைப் பொழிவினைப் பெற்றுத் தருவதாகும்.
“யாதேவி சர்வ பூதேஷு சுபர்ணீ ரூபேணே சமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :”
இம்மந்திரத்தை விடாமல் தினமும் 1008 முறைக்குக் குறையாமல் 48 நாட்கள் ஜபித்து வருவதுடன் வேலை பாக்யம் தரும் செவ்வாய் பகவானின் வாகனமான ஆடுகளுக்கு வேர்க்கடலை அளித்து வரவேண்டும்.
தஞ்சை மாவட்டம் திருமயேந்திரப்பள்ளியில் உள்ள சிவாலய இந்திர தீர்த்தத்தில் எண்ணெய் தேய்த்து நீராடி வழிபட்டால் நோய் நொடியில்லாமல் மேனி அழகோடு வாழலாம்.
மிருகண்டு முனிவர் வனதுர்க்கா பரமேஸ்வரிக்கு கதிராமங்கலத்தில் ஒரு கோயில் கட்டியுள்ளார். இங்கு அம்பிகையை மன்றாடி வேண்டி வியாழனன்று ராகு காலத்தில் அபிஷேக ஆராதனை, அன்னதானம், வஸ்திர தானம் செய்து தொடர்ந்து வணங்கிடில் நல்ல குடும்ப வாழ்வு கிட்டும்.
அண்ணனின் திருமணம் நிறைவேற:- தேரழுந்தூர் தலத்தில் பெருமாளின் இடப்பக்கம் அருள்பாலிக்கும் ஸ்ரீகருட பகவானுக்கு தேன் கலந்த பாலை நிவேதனம் செய்து அன்னதானம், வஸ்திர தானம் பன்னிரெண்டு துவாதசி திதிகளில் செய்து வர மூத்தவனுக்கு நல்ல வரன் தானே அமையும்.
அழகும், ஆண்மையும், வீரமும் ஆண்கள் பெறவும், மகாலட்சுமியின் அழகைப் போலவும் அனைத்து உயர்வையும் பெற வேண்டும் என்று விரும்பும் பெண்களும் தென்திருப்பேரையில் மகர நெடுங்குழைக் காதனாகிய பெருமாளுக்குத் தொடர்ந்து இறைச் சேவை செய்து தான, தர்மங்கள் செய்திடில் அனைத்தையும் பெறலாம் எதிர்காலத்தில்.
ஸ்ரீவரகுண கணபதி திருச்சி அருகே செட்டிகுளம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கின்றார். இவருக்கு சதுர்த்தி, சதுர்த்தசி, பஞ்சமி திதிகளில் வெண்ணெய் சார்த்தி, வெண்ணெயிட்ட வெண்பொங்கலைப் படைத்து தானமளித்து வர சீர்வரிசைகளாலும் , நாக தோஷங்களாலும் தடைபட்டுள்ள திருமணங்கள் நன்முறையில் நிறைவேறும்.
பெண்கள் துன்புறாமல் நல்ல இடத்தில் திருமணம் நடக்க ஒரு அற்புத மந்திரம் உண்டு. அதாவது நல்ல குடும்பத்தைச் சேர்ந்த நல்ல கணவன் கிட்டிட இதனைக் கன்னிப் பெண்கள் தினந்தோறும் ஜபித்து வர வேண்டும். "காத்யாயனி மஹாமாயே! மஹாயோகின் யதீச்வரி!
நந்த கோபஸுதம் தேவி! பதிம் மே குரு தே நம:!!"
நல்ல குடும்பத்தில் பெண் கிட்டிட இதற்குப் பூரணமாய் உதவி செய்யும் எம்பெருமானாகிய வேல் முருகன் வேலை படுகண்ணி என்னும் மந்திரக் கட்டால் வில்லாய் மாற்றி வில்லேந்திய வேலவராய் நின்று பூம்புகார் அருகே உள்ள சாயாவனத் திருத்தலத்தில் வழிகாட்டக் காத்துள்ளார். தஞ்சம் புகுங்கள், தரணியில் நலம் பெறுவீர்! விசாகம், கார்த்திகை, அனுஷம், மிருகசீரிஷம், செவ்வாய், மகம், உத்திர நாட்களில் இங்கு வேலுக்கு வெண்ணெய் சாற்றி வெண்ணெய், நெய் கலந்த உணவை அன்னதானமாக அளித்து வாருங்கள். நல்ல சம்பந்தம் வாய்க்கும்!
திருமணம் பூரணம் பெறுவதற்கு உதவியாய் இருக்கும் தெய்வம் கண்ணனூர் கோயிலாகும். புதுக்கோட்டை அருகில் உள்ள மிகப் பழமையான கோயில். இவ்வாலயத்தில் ஏழைகளுக்கு இலவசத் திருமணம் செய்து வைத்திடில் இதுவே பல திருமணத் தடங்கல்களுக்கு நிவர்த்தியாக அமைந்து இவ்வாறு நடத்தி வைத்தவரின் இல்லத்தில் உள்ள ஏனையோர்க்கான திருமணத் தடங்கல்களையும் நீக்குகின்றன...
குழந்தைகள் தவறான வழியில் சென்று குடும்பமானத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வராமல் இருக்க தாய், தந்தை குடும்பம் அனைவரும் சரணடைய வேண்டிய தெய்வம் ஒன்று உண்டு. அவர்தாம் கங்கையணி தட்சிணாமூர்த்தி. காஞ்சிக்கு அருகே வந்தவாசியில் உள்ள அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் கங்கையை அணிந்த தட்சிணாமூர்த்தியைத் தொடர்ந்து குடும்பத்தோடு தரிசித்து தேனாபிஷேகம், பால் நிவேதனம் செய்து தானமளித்திட பிள்ளைகள் நன்கு வளர்ந்து குடும்ப மானம் காக்கப்படும்.
கணவனுக்கு நல் ஆயுளைத் தருகின்ற கோயில் .அற்புதமான ஆலயம். கல்லால மரமுள்ள ஆலயம். இது செங்கற்பட்டு மாவட்டத்தில் செய்யூர் என்ற இடத்தில் உள்ள சிவாலயமே..!
மனைவிமார்கள் கணவனுக்கு அடங்கி தெய்வீகமான அன்புடன் ஆறுதலாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிற கணவன்மார்கள் பார்வதி மலையிலிருக்கும் இறைவனுக்கு திங்கள், புதன் கிழமைகளில் புனுகு சார்த்தி கருநீல திராட்சை கலந்த உணவுடன் இயன்ற இதர தானங்களைச் செய்து வந்தால் தன் நிலையையுணர்ந்து மனைவி அன்புடன் வாழ்வாள்.
மாமனார், மாமியார் கொடுமைகளிலிருந்து மீளவும் திருத்தல சக்தியொன்றுண்டு. இங்கு தான் பல யோகியரும் மஹரிஷிகளும் மக்களுடைய இல்லறத் துன்பங்களைக் களைந்தனர். அந்த இறைவன் இருக்கின்ற இடமோ ஊதிமலை! ஊதிமலை முருகனுக்கு செவ்வாய் ஹோரை நேரத்தில் செவ்வாய் தோறும் பழங்களாலான மாலைகள் சாற்றி ஏழைகளுக்குப் பழங்களை தானமாக அளித்து வர முருகனருள் கனிந்து இல்லறக் கொடுமைகள் தணியும்..
பலரும் தங்களுடைய குல தெய்வம் யாதென அறியாது திகைக்கின்றனர். குலதெய்வம் யாதென அறிந்து முடியிறக்குதல், மாவிளக்கு இடுதல் என பல நேர்த்திகளைச் செய்து அவ்வப்போது குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நெடுங்காலம் தவமிருந்து பெற்ற பிள்ளையின்/ தம் குழந்தையின் முதல் முடியை இறக்குவதற்குக் குல தெய்வத்தின் திருத்தலமே உத்தமமானதாம். தம்முடைய குலதெய்வங்களை அறிந்திட தக்க சத்குருவை நாடிடுதல் வேண்டும். சற்குரு கிட்டும் வரை, குலதெய்வந்தனை அறியாதோர் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தில் உள்ள ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பெரியோர்களின் ஆசியுடன் தங்கள் குழந்தையின் முதல் முடியை இறக்குதல் மிகவும் விசேஷமானதாகும். ஸ்ரீமுருகனை வளர்க்க கார்த்திகை தேவமூர்த்திகள் (கார்த்திகைப் பெண்டியர்) அருள் பெற்ற தலமிது!
ஞாயிற்றுக் கிழமையன்று தஞ்சை திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஸ்ரீசூர்ய கோடீஸ்வரர் (ஒன்பத்து வேலி) ஆலயத்தில் சுவாமிக்கு வெண்பட்டு சார்த்தி கண்களின் அமைப்பில் கோதுமை அல்வா செய்து படைத்து தானமளித்து வர குழந்தைகளுக்கு கண் பார்வை விருத்தியடையும்..
மயக்க நோய்கள் தீர :- ஞாயிற்றுக் கிழமைகளில் கேரட் சாதம், பசலைக் கீரை சாதம், சேனைக் கிழங்கு பொரியல், சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்ற கிழங்கு வகை உணவுப் பொருட்களைச் செய்து சிவன் கோயிலில் பைரவருக்கு நைவேத்தியம் செய்து தானம் அளித்திடில் கண் திருஷ்டியால் வரும் நோய்கள், சுரங்கள், குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுத்தல் இவையெல்லாம் தீரும் .
பல குழந்தைகளும் அடிக்கடி ஜ்வரத்தால் பாதிக்கப்பட்டு fits எனப்படும் இழுப்பு நோயால் பல துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இந்த வியாதியைக் கண்டாலே பெறோர்கட்கும் பீதி ஏற்படுகின்றது. “எப்போது ஜ்வரம் வருமோ, உள்ளங்கை, கால் சுடுமோ, கை, கால் இழுத்து பிள்ளை அவஸ்தைப் படுமோ” என பெற்றோர்கள் பெரிதும் பீது கொள்கின்றனர். சிதம்பரம் சீர்காழி அருகே திருமயிலாடியில் உள்ள ஸ்ரீமுருகப் பெருமானுக்கும், ஸ்ரீசீதளா தேவி அம்பிகைக்கும் தாமே அரைத்த சந்தனக் காப்பிட்டு ஏழைகளுக்கு இளநீரும், தேங்காய் சாதமும் தானமாக அளித்து வர fits எனப்படும் இழுப்பு நோய்க்குத் தக்க நிவாரணம் கிட்டும். ஸ்ரீமுருகப் பெருமானே ஸ்ரீசீதளா தேவியை வழிபட்டு தம் ஜ்வரத்தைத் தணித்துக் கொண்ட அற்புதத் தலம்.
திருப்புனவாசல் ஸ்ரீவிருத்தபுரீஸ்வரர் சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆகண்டல விநாயகருக்கு சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளிலும், புதன் கிழமைகளிலும் 48 தேங்காய்களை உடைத்துப் படைத்து தேங்காய் சாத தானம் அளித்து வந்தால் தார்மீக ரீதியாக இழந்த பதவியைப் பெற நல்வழிகிட்டும். ஸ்ரீஇந்திர மூர்த்தி வழிபட்டு தன் தேவசபையை நிலைநிறுத்த அருள்பெற்ற திவ்யமான சிவத்தலம்.
கும்பகோணம் திருலோக்கி ஊரில் உள்ள ஸ்ரீசுந்தேரஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் சுவாமி – அம்பாள் சிலாக்கல் – ரிஷபாரூட தரிசனம் அதிஅற்புத பலன்களைத் தரவல்லது.. அதாவது சிலாக்கல்லில் வடிக்கப் பெற்ற நந்தியின் மேல் சிவன் அம்பாளும் அருள்பாலிக்கின்ற தரிசனம் காணக் கிடைக்காதது! தம்பதிகளுக்கு மனநிறைவையும், குடும்ப வாழ்வில் சாந்தத்தையும் பெற்றுத் தரவல்ல மிகவும் அற்புதமான சிலாக்கல் தரிசனம் இது!
சிவனின் ஆறு ஜோதிகளிலிருந்து தத்புருஷராய்த் தோன்றிய முருகப் பெருமானை மாயூரம் அருகே திருவிடைக்கழியில் அரிய தரிசனமாக, பின்புறம் சிவலிங்க தரிசனம் முன்புறம் முருக தரிசனமாக அடிக்கடி தரிசித்து வருவதாலும் இத்தலத்தில் மும்மலம் நீக்கும் மாமருந்தான அன்னதான சக்தியைப் பெற மாம்பழ இனிப்புக் (பாயசக்) கூட்டுடன் அன்னதானம் செய்து வருவதாலும் முறையற்ற காம உணர்வுகள் படிப்படியாகத் தணியும். தீய ஒழுக்கங்களுக்கு ஆட்பட்டோர் திருந்திட உதவும் திருத்தலம்.
கணவனே கண் கண்ட தெய்வம் என்பது வேதவாக்கே. ஆனால் வேதனைகள் நிறைந்த இக்கலியுலகில் திருமணம் ஆகி கணவனை இளம் வயதில் இழந்து இன்னலுறும் விதவைகள் தங்களுடைய பாதுகாப்பிற்காகவும், வேறு நற்காரணங்களுக்காகவும் தக்க பெரியோர்களின் ஆசியுடன் மறுமணம் செய்து கொள்வதில் தவறில்லை. ஆனால் மறுமணம் நலமுடனும், அமைதியுடனும், நல்லவரோடு அமைய ஆன்மீகத்தில் பல வழிகள் உள்ளன.
மறுமணம் நன்முறையில் நிறைவேறவும் அதோடு மட்டுமல்லாமல் நியாயமான காரணங்களுக்காக தார்மீக ரீதியாக விவாகரத்து செய்து மறுமணம் செய்ய விரும்பும் ஆணும், பெண்ணும் முறையாக நல்வாழ்வைப் பெற தக்கதோர் வழிபாடு உண்டு.. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புழுங்கல் வாரி விநாயகர் என்னும் அற்புதமான தெய்வமூர்த்திக்கு முறையாக நேர்த்தி வைத்து 48 சதுர்த்திகள் விரதம் இருந்து ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம், ஏழை தம்பதியர்களுக்கு மாங்கல்ய தானம் செய்து புழுங்கல் அரிசி நைவேத்தியம் செய்து வேண்டினால் நலம் பெறலாம். நன்முறையில் மீண்டும் குடும்ப வாழ்க்கை அமையும்.
பல குடும்பங்களிலும் அன்புடன், பாசத்துடன் வளர்ந்த சகோதர சகோதரிகளின் திருமண வாழ்விற்குப் பின் பலவிதமான மனவேறுபாடுகளால் சாதாரண முறையில் உரையாடக் கூட இயலாத அளவிற்கு சொத்து, நில, பாகப் பிரிவினை விஷயங்கள் தீராப் பகையாய் முன் நிற்கின்றன! இவர்கள் திருவாரூர் அருகே (திரு)நாட்டியத்தாங்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீரத்னபுரீஸ்வரருக்கு செவ்வாய்க் கிழமையன்று செம்பவள நிறமான மாதுளைப் பழ முத்துக்களால் காப்பிட்டு ஏழைகளின் திருமணங்களில் ரத்தின மற்றும் பவள மோதிரம், பொன் மாங்கல்யம் போன்றவற்றைச் செய்து தரத் தேவையான உதவிகளை, கடன் உதவியேனும் செய்து வந்தால் “கரிதோஷங்கள்” நீங்கி பாகப்பிரிவினை சுமுகமாக அமைந்து மனசாந்தி கிட்டும். இரத்தின தானத்திற்கு உறவுப் பகைமை தோஷங்களை நீக்கும் அற்புத தெய்வ சக்தியும் உண்டு.
1. தன் தாய், தந்தையரின் உயிர் பிரிகையில் அருகில் இருக்கு பாக்யத்தைப் பெறாதோரும், பெற்றோரின் ஈமக்கிரியையின் போது அருகில் இல்லாதோரும் இதற்குரிய பிராயசித்தமாக திருச்சி லால்குடி அருகேயுள்ள பூவாளூர் சிவாலயத்தின் நதி தீரமான பல்குனி ஆற்றில் அமாவாசை தோறும் தர்ப்பணமும், அன்னதானமும் செய்து வருதல் வேண்டும்.
2. பட்டைலிங்க சக்திகள் – வாழ்க்கைக் குறிக்கோளை நிறைவேற்றிட
திருத்துறைப்பூண்டி அருகே திருக்கடிக்குளத்தில் சிவபெருமான் அருள்பாலிக்கின்றார். இறையருளால் தான் எதையும் சாதிக்க முடியும் என்ற வைராக்யம் கூடிய ஆழ்ந்த நம்பிக்கையுடன் இச்சிவலிங்க மூர்த்தியை அஷ்டமி திதியிலும், சனிக்கிழமையன்று புதஹோரை நேரத்திலும் [பகல் 11-12, மாலை 6-7 மணி வரை] குங்குமப்பூவுடன் வெண்ணெய் சேர்த்துக் காப்பிட்டு வணங்கி வருதலினால் எந்த நல்ல குறிக்கோளும் நன்முறையில் கைகூடும். இங்கு வெண்ணெய் தானம் விசேஷமானதாகும்.
3. தெய்வத் திருமகனாகிய ஸ்ரீராமருக்கு அடுக்கடுக்காய்த் துன்பங்கள் வந்த போது அவர் வேண்டி வணங்கி வழிபட்ட நாதர் தாம் தஞ்சை மாவட்டம் அறந்தாங்கி ஆவுடையார் கோயில் அருகே உள்ள திருப்புனவாசல் சிவமூர்த்தியாவார். புதுக்கோட்டையிலிருந்தும் செல்லலாம். மிகவும் பிரம்மாண்டமான லிங்க மூர்த்தி. எவ்வளவு வஸ்திரம் சார்த்தினாலும் பாணலிங்கத்திற்கும், ஆவுடைக்கும் போதாது போல் தோன்றும். உங்களுடைய ஜன்ம நட்சத்திர நாளில் திருப்புனவாசல் மூர்த்திக்கு மல்லிகை மணம் தோய்த்த (Jasmine Scent) நிறைய வஸ்திரங்களை லிங்கத்திற்கும், ஆவுடைக்கும் சார்த்தி அதனை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்து தானமளித்து வந்தால் துன்பச் சூழல் தணியலாகும். இங்கு சிவபுராணமும், ஸ்ரீஆதித்ய ஹிருதய மந்திரமும் ஓதி அடிப்பிரதட்சிணமும் செய்து வாருங்கள்.
4. இன்று பல கோயில்களிலும் உள்ள அஷ்ட நாக மூர்த்திகள் விளங்குகின்றன. (சென்னை வடபழனி ஸ்ரீவேங்கீஸ்வரர் ஆலயம்) அஷ்டமி திதியில் இவற்றுக்குத் தாமே அரைத்த மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு 108 முறை வலம் வந்தால் உறவு முறையில் தாம் எதிர்பார்க்கின்ற நல்ல திருமண சம்பந்தங்கள் கைகூடும்.
5. சென்னை – அரக்கோணம் அருகிலுள்ள திருவாலங்காட்டில் அருள்பாலிக்கின்ற தச கர ஸ்ரீவல்லப கணபதியைச் சரணடைந்து தங்களுடைய உள்ளக்கிடக்கைகளை யெல்லாம் பொழிந்து நேர்த்தி செய்து கொண்டால் தனித்து வாழும் இல்லறப் பெண்மணிகட்குத் தக்க நல்வழியை நல்ல வைராக்யமான வாழ்வினைத் தந்து ஸ்ரீவல்லப கணபதி பெருமாள் அருள்பாலிப்பார்.
6.தஞ்சை மாவட்டம் கஞ்சனூருக்கு அருகே சூரியமலை அல்லது சூரியமூலை எனும் கிராமத்திலுள்ள சூரிய கோடீஸ்வர மூர்த்திக்கு இயன்ற போதெல்லாம், இளநீர் அபிஷேகமும், வெண்ணெய்க் காப்பும் இட்டு, பால்பாயச தானம் செய்து வந்தால் தவறான வழியில் செல்லும் பிள்ளைகட்குத் திருந்தி வாழ நல்வழி கிட்டும்.
7. கர்ப்ப தோஷங்கள் நீங்க! நல்ல கணவன் வீட்டார் அமைய!
பொறாமைக் கண்களின் திருஷ்டி படாமல் இருக்க, புதிதாக கர்ப்பம் தாங்கி இருக்கும் பெண் சுகமாக கர்ப்பம் சுமந்து சுகப் பிரசவம் அடைய பாடல் பெற்ற முருகன் கோயிலில் செவ்வாய் தோறும் பாலில் தேன் கலந்து காலையில் முருகனுக்கு நைவேத்தியம் வைத்து தானும் பருகி பலருக்கும் தானம் தொடர்ந்து அளித்து வந்தால் இத்தகைய கண்ணேறு தோஷங்கள் விலகும்.
8. பிள்ளைகளுடன் ஏற்பட்டுள்ள பிணக்கு தீர சஷ்டி திதியில் குன்றிலிருக்கும் குமரனுக்கு, மலைத்தலத்தில் அருள்பாலிக்கின்ற முருகனுக்கு மாம்பழம் நைவேத்யம் வைத்து வணங்கி ஏழைகளுக்கு தானம் அளித்திடல் வேண்டும்.
9. தவங்கிடந்து பெற்ற பிள்ளைப் பேற்றுக்கான தோஷங்கள் நீங்கிட...
வில்வ மரக் கட்டையைச் சந்தனக் கல்லில் உரைத்து வருகின்ற விழுதை கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்களின் கணவன்மார்களோ நெற்றியில் இரவில் பற்றுப் போல இட்டு வருதல் வேண்டும். காலையில் எழுந்து சிவன் கோயிலில் இருக்கும் ஏழைக்கு உணவு அளித்தலால் நலம் பெறலாம்..
10. பொய்யான நண்பர்கள் வாக்கையே புனித அறிவுரையாகக் கருதுவர். . இவ்வாறு இருப்பவர்கள் யார் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். இவ்வாறு இருப்பவர்கள் திருந்திட சுவாமி மலையில் உள்ள “கண் கொடுத்த விநாயகரை” வேண்டி ஞாயிறு தோறும் கீரைக் கூட்டுடன் ஞாயிறு சூரிய ஹோரை நேரத்தில். (காலை 6-7, பகல் 1-2) அடுக்குமல்லி, சார்த்தி கீரை கலந்த அன்னம் தானம் செய்திடில் சண்டை, சச்சரவு தீர்ந்து நன்கு வாழலாம்..
11. சென்னை அருகே “பஞ்சேஷ்டி” என்னும் தலத்தில் சித்திரை, வைகாசி பௌர்ணமியில் அன்னதானம் செய்திடில் முறையான அதிகார பதவியும், வரவேண்டிய பிரமோஷனும் தானாக வரும்.
12. மிகுந்த மூலிகை சக்திவாய்ந்த திருக்கழுக்குன்ற மலையை கிரிவலம் வந்து ஸ்ரீருத்ர கோடீஸ்வரரை வணங்குதலால், தொண்டை சம்பந்தமான நோய்களுக்குத் தக்க நிவாரணம் கிட்டும். வாயால் ஓத வேண்டிய வேதமே மாமலைகளாக விளங்குவதால் திக்கு வாயும், ஊமைத்தனமும் நீங்கி நல்வழி பெறுவதற்கு ருத்ரகோடீஸ்வர தரிசனமும், கிரிவலமும் பெரிதும் உதவும்.
13. கரும்பேந்திய கற்பக விநாயகரை முறையாக வணங்கி ஏழை தம்பதியருக்கு பொன் மாங்கல்ய தானம் அளித்து வர நன்முறையில் உண்மையான அன்பு கூடிய காதல் திருமண வாழ்வு அமையும். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் துர்க்கை அருகில் தாமரை மீது அமர்ந்து கைகளில், கரும்பும் கொண்டு அருள்கின்றார் ஸ்ரீகற்பக விநாயகர். உண்மையான தெய்வீக அன்பு நேயத்தையே காதலாகப் பூண்ட ரதி, மன்மத மூர்த்தி – தேவ தம்பதியர் அங்கு அற்புதத் தவம் பூண்டு ஸ்ரீகற்பக விநாயகரின் அருளைப் பெற்றனர். பல மஹரிஷிகளும் தம்பதியராக தரிசித்த அற்புத விநாயக மூர்த்தி!
14. வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பஞ்சு, கரி, விறகு, எண்ணெய் இவைகளை விலைக்கு வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கினால் இதனால் குடும்பத்தில் வியாதிகள் வரும். இதற்குப் பரிகாரமாய் சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் இருக்கும் கார்த்திகை விநாயகரை வேண்டி மாதுளைக் கனிக் காப்பிட்டு மாதுளைப் பழத் தானம் செய்திடில் நலம் பெறுவர்.
15. தாய், தந்தை, குழந்தைகளோடு எடுத்த போட்டோக்களை இரண்டு சுவர்கள் கூடும் மூலையில் மாட்டுதல் கூடாது.
16. நக அழுக்குத் தோஷங்கள்! கட்டைவிரல் நகத்தில் கரும்புள்ளி காணப்பட்டால் முறையற்ற வாய்ப் பேச்சால், பெண்களால் கஷ்டங்கள் ஏற்படும்.. இதிலிருந்து நிவர்த்தி பெற ஆறுமுகத்துடன், 12 கர முருகனுக்கு மாவிளக்கிட்டு அன்னதானம் செய்ய வேண்டும்...
17. பிறருடைய கண் திருஷ்டியால் வாகன உரிமையாளர்கள் அடிக்கடி அடிபடுவதும், வாகனங்களின் டயர் வெடிப்பதும், வண்டிச் செலவுகள் அதிகமாவதும், ஓட்டுநர்கள் பல சங்கடங்களை அனுபவிப்பதும் உண்டாகும்.. இத்துன்பங்கள் தீர ஆன்மீகத்தில் பல வழிகள் இருந்தாலும் இது ஒரு முக்கிய வழி இதனைக் கடைபிடித்தல் நலம் தரும்.. சேலம் மாவட்டத்திலுள்ள தாராமங்கலம் அருள்மிகு கைலாயநாதர் கோயிலுள்ள தேர்வாயில் கோபுர தரிசனம் பெற்று எண்கோண வடிவுள்ள தெப்பக்குளத்தின் அருகே அமர்ந்து தியானம் செய்து பொடியான சிறு வெல்லத் துண்டுகளை மீன்களுக்கு உணவாக இட்டு வந்திடில் “வேர்க்குழிக் கண் திருஷ்டி“ விலகும்.
18. சூரிய ஹோரை நேரத்தில் பட்டுக்கோட்டை அருகே பரிதிநியமம் ஸ்ரீபரிதியப்பர் (பருத்தியப்பருக்கு) சூரியனுக்குரிய தானியமாகிய கோதுமை அல்வா படைத்து ஏழைகளுக்கு தானமாக அளித்து வர தீராத வயிற்று நோய், குடல் அழற்சி நோய், குடல் புண், கர்ப்பப் பை நோய்களுக்குத் தக்க நிவாரணம் கிட்டும். ஸ்ரீசூரிய பகவானுக்கே ஏற்பட்ட வயிற்றுப் பிணிகள் தீர்ந்த மகத்தான புண்ணியத் தலமிது.
19. நல்லதோர் இறை நினைவோடு முதிய வாழ்க்கையைப் பெற காஞ்சிக்கு அருகே உள்ள திருப்புட்குழி திருத்தலத்தில் தென்மேற்கில் உள்ள ஸ்ரீஆண்டாளுக்குத் திருமஞ்சனம் செய்து அன்னதானம் செய்திடில் நல்வகையான இறைவாழ்க்கை அமையும், புட்குழியில் புதைமுன் பூர தேவி அருள்பெறுவீர்..
20. போராட்டங்களிடையே திருமணம் நடைபெற்ற இளம் தம்பதியர் தங்கள் வாழ்நாளில் நன்றாக வாழ்ந்து அனைவர் மத்தியிலும் பொறாமைக் கண்கள் நடுவிலும் கை தட்டி சிரிக்கக் காத்திருப்பவர் நடுவிலும் முன்னேறி வாழ்ந்து காட்ட ஆன்மீகத்தில் பலவழிகள் உண்டு. அதில் முக்கியமாக மன்னார்குடியில் நாச்சியார் சந்நிதிக்கு எதிரில் கருடனுடைய தாயாகிய “வினதை” என்ற தேவி திருக்காட்சி கொடுத்து இளம் தம்பதியரை வாழ வைக்க அருளும் தெய்வம். இத்தெய்வத்திற்கு நேர்த்தி வைத்து இளம் தம்பதியினர் வேண்டினால் வாழ்க்கையில் முன்னேறலாம்..
21. பிறர் நம்மைக் கண்டு கொள்ளாமல் இருந்து வேதனை தரலாம். நாம் கேலி செய்யப்படலாம். இதனால் நமக்கு இரத்தக் கொதிப்போ, இருதய வலியோ, நரம்புக் கோளாறோ வர சந்தர்ப்பம் உண்டு. இது போன்ற சந்தர்ப்பங்கள், அதிர்ச்சிகள் நம் வாழ்நாளில் வராமல் இருக்க வேண்டுமென்றால் அதற்குப் பல வழிகள் இருந்தாலும் ஒரு முக்கிய வழியை இங்கு தெரிவிக்கின்றோம். ஆனைமலையில் உள்ள ஆலயத்தில் அருள்மிகு மாசாணியம்மன் முப்பது அடி நீளத் திருமேனியுடன் சயனித்த கோலத்தில் அருள்புரிகிறார். அந்தத் தாயிடம் முறையிட்டு “மானத்திற்கு பங்கம் வராமல் அருள வேண்டும், அம்மா!” என்று கதறி அழுது வேண்டி, தான, தர்மம் தொடர்ந்து செய்திடில் நல்ல மாற்றம் காணலாம்.
22. தொட்டில் பிள்ளையை வளர்த்தல் என்பது பெரும் பணியாகும். முருகப் பெருமானே தொட்டில் பிள்ளையாய் வளர்ந்த திருத்தலமே மாயூரம் அருகே குத்தாலம் அருகிலுள்ள விலத்தொட்டித் திருத்தலமாகும். இங்கு முருகப் பெருமானுக்கு, சிவப்பு நிற பட்டு வஸ்திரங்களைச் சார்த்தி ஏழைக் குழந்தைகளுக்கு நன்கு தைக்கப்பட்டப் புதிய பட்டாடைகளைத் தானமாக அளித்து வந்தால், குழந்தைகள் எவ்விதத் தோஷமுமின்றி நன்கு வளர்வதோடு அடிக்கடி நோய்வாய்ப்படுகின்ற நிலைமையும் மாறி குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வளர்வர்.
23. கணவன் மனைவியிடையே பேதங்கள் அகல :- கணவன் மனைவி சேர்ந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும். அந்த முடிவு வெற்றியடைய வேண்டுமென்றால் திருகோடிக்கா என்ற தலம் சென்று முக்கோடி தீர்த்தத்தில் மூழ்கி சிவனை மன்றாடி வேண்டி அன்னதானம், தான, தர்மங்கள் செய்திடில் கருத்து வேறுபாடுகள் தீர்ந்து ஒற்றுமை வளரும்.
24. ஸ்ரீமஹா விஷ்ணுவிடமிருந்து ஸ்ரீமஹாலட்சுமியைப் பிரிப்பது போலான, நெற்றியில் வெறும் சிவப்பு நிற நாமத்தை இடுவதைத் தவிர்த்து, சர்வேஸ்வரனாம் திருமாலின் பரிபூரணமான திருவருளைப் பெற்றிட இரு வெண்நாமங்களிடையே சிவந்த திருச்சூர்ண நாமமிட்டுத் தெய்வீகத்தைப் பெருக்குங்கள்! வெறும் சிவப்புக் கோடிட்டுச் சுருக்கி சாபத்திற்குள்ளாகாதீர்கள்!
25. திருமணப் பொருத்தம்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் அனுஷம், ஆயில்யம், விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களை திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தம்பதிகள் மன ஒற்றுமையற்று பலவித சஞ்சலங்களுக்கு ஆட்பட்டு மனப் போராட்டங்களைச் சந்திக்க வேண்டி வரும். ஆகவே, இவ்வாறு மணந்த தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ கணவனும், மனைவியும் குழந்தைகளோடும் மதுரைக்கு அருகிலுள்ள விராதனூர் என்னும் சிவத்தலத்தில் உள்ள ரிஷப வடிவத்தில் உள்ள சிவபார்வதிக்கு பங்குனி உத்திரத்தில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாங்கல்ய தானம், அன்ன தானம் செய்து வர குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
26. திருமண தோஷ நிவர்த்தி :
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், விசாகம், மகம், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களைத் திருமணம் செய்துக் கொள்வதைத் தவிர்த்திடவும். விதி வசத்தால் இவ்வகையில் திருமணம் நடந்து விட்டால் குடும்பத்தில் பொய் சண்டைகளும், தேவையற்ற சந்தேகத்தால் மனக் குழப்பங்கள் வரும். ஆகவே இத்தம்பதியர் வெள்ளி தோறும் குறிப்பாக தை மாத வெள்ளிக் கிழமைகளில் திருச்சிக்கு அருகே சமயபுரத்திற்கு கிழக்கில் அமைந்துள்ள ஆனந்த சௌபாக்கிய சுந்தரி அழகம்மை என்ற அம்மனுக்கு பூ ஆடை சாற்றி ஜாதி, பேதமின்றி ஏழைச் சுமங்கலிகளுக்கு தாம்பூலம், பூ, மஞ்சள் அளித்து தொடர்ந்து அன்னதானம் செய்து வந்தால் தம்பதியர் நல்வாழ்வு பெறுவர்.
27. பலவிதமான குறிப்பாக தோல் சம்பந்தமான நோய்கள் நீங்க வேண்டும் என்றால் தும்பை பூவால் ஸ்ரீகாசி விஸ்வநாதர் லிங்கத்திற்கு அர்ச்சித்து தேன் அபிஷேகம் செய்து வர அனைவர்க்கும் குறிப்பாக புஷ்ப வியாபாரிகளும், தங்க வியாபாரிகளுக்கும், பொற் கொல்லர்களுக்கும் வருகின்ற நோய்கள் தீரும்.
28. மதுரையில் உள்ள வண்டியூர் தெப்பக்குளத்தில் செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில் பிதுர்த் தர்ப்பணங்களும், அமாவாசைத் தர்ப்பணங்களும், பிறருக்கான காருண்யத் தர்ப்பணங்களும் செய்து வர, வாகனத் தொழில், வாகன உதிரி பாகங்கள் விற்பவர்கள், ஓட்டுனர்கள் இவர்கள் தர்ப்பணமும், காயத்ரீ ஜபமும் செய்திடில் நல்லபடியாய் சொந்த வாகனம் அமையும், இவ்வாறு செய்கின்றவர்கள் பெறுகின்ற வண்டிகளைப் பிறர் பார்த்து பொறாமைப் பட மாட்டார்கள்!
29. தீய கனவுகளும் தீய சக்திகளைப் போல் நம் உடலில் புகுந்து பல துன்பங்களைத் தருவதுண்டு. இத்தகைய தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்றவர் எல்லாம் வல்ல முருகப் பெருமானே! இவ்வாறு தீய கவுகளையே நீக்கும் முருகனின் வடிவம் எது தெரியுமா? ஆறுமுகத்தோடு ஆறுகரம் உடைய முருகனே, அப்பெரும் தெய்வ மூர்த்தி. இம்முருகனுக்கு விரதம் இருந்து பால் பொங்கல் படைத்து அன்னதானம் செய்து அடிக்கடி வலம்வருவதால் தீயகனவின் வேகங்களைத் தடுத்து நிறுத்தி விடலாம்.
30. இல்லத்தில் காண வேண்டிய நித்திய விளக்கு ஜோதி
அனைவரும் தினமும் தம் இல்லத்தில், விளக்கேற்றி வழிபட்டாக வேண்டும். மாதவிலக்கு, நோய்த் துன்பங்கள், வெளியூர் செல்லல் காரணமாக இதில் தடங்கல் ஏற்பட்டால், அந்த அளவிற்கு, இல்லத்தில் இருட்டுத் துன்பங்கள், மயக்க நோய்களாகவும், கண் நோய்களாகவும், திருடர்களால் நஷ்டம், இருட்டு விபத்துக்களாகவும் வந்து சேரும். பாக்டரி, தொழிற்சாலைகளிலும் தினமும் விளக்கேற்றி வழிபட வேண்டும். 365 நாட்களில், விளக்கு ஏற்றாது விடுபட்டுப் போன நாட்களுக்கு, ஓரளவு பிராயச்சித்தம் பெற, சுத்தமான பசு நெய் இட்டு, 365 தாமரைத் தண்டுத் திரிகள் (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) ஒன்று சேர்ந்த அகல், அல்லது குத்து விளக்கை மையமாக வைத்து, குந்தள ஜோதி பரிமளிக்கும் சித்துக்காடு சிவாலயத்தில், சுவாதி மற்றும் பிரதோஷ நாட்களில், பல பெண்களும் ஒன்று சேர்ந்து, ஏழைகளுக்கும் நல்வாய்ப்பு தந்து, கூட்டு விளக்கு வழிபாடு ஆற்றி வழிபடுதல் வேண்டும்.
31. பம்பூரண சக்திகள் பல்கிப் பெருகும் ஒவ்வொரு பூர நட்சத்திரத்தன்றும் கண்ணாடி முன் வாசனைப் பூக்கள், பழங்கள், கீரைகள் இவற்றை வைத்துப் பூஜிக்க வேண்டும். இவ்வாறு கண்ணாடி பூஜையை பூர நட்சத்திர தினம் தோறும் நிறைவேற்றி வந்தால், வாஸ்து சக்திகள் இல்லத்தில் நன்கு விருத்தியடையும்.
32. எதிர்பாராத விபத்துகள், துன்பங்கள் வாழ்க்கையில் ஏற்படும் போது
“விடமங்களா விடமங்களா
மங்களச் சுடரேற்றிப் படி படிவேண்
குடகக் கடவழி காட்டியருள் கடவுளே!“
என்று ஆபத்சகாயராகத் துலங்கும் துடையூர் ஸ்ரீவிஷமங்களேஸ்வரரை எண்ணி வேண்டித் துதித்திடில், எத்தகைய விஷமான ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்ற வல்லவர்.
We use cookies to analyze website traffic and optimize your website experience.